மறைந்தார், ஏ.ஆர்.ரகுமானின் பிதாமகன்..
மலையாள சினிமாவில் கொடி கட்ட பறந்த இசை அமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன்.
200 படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள தனது சொந்த கிராமமான பல்லுருதியில் நேற்று மரணம் அடைந்தார். வயது- 84.
அந்த காலத்தில் மலையாள சினிமா படங்களின் பாடல்கள் ஒலிப்பதிவு சென்னையில் தான் நடக்கும்.
மலையாள படங்களுக்கு அப்போது, இசை அமைத்து வந்த ஆர்.கே.சேகர் , சென்னையில் உள்ள தனது வீட்டில் இசைக்கூடத்தையும் வைத்திருந்தார்.
கேரளாவில் இருந்து அவ்வப்போது சென்னை வந்து செல்லும், அர்ஜுனன், சேகரின் இசைக்கூடத்தில் தான் தங்குவார். அர்ஜுனனின், பெரும்பாலான பாடல்களின் கம்போசிங் சேகர் இசைக்கூடத்தில் தான் நடந்துள்ளது.
நாளடைவில் இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.
அப்போது, சேகர் மகன் திலீப்புக்கு ( பின்னாட்களில் ஏ.,ஆர்.ரகுமான்) மூன்று அல்லது நான்கு வயது தான் இருக்கும்..
விடிய விடிய நடக்கும் கம்போசிங்கை திலீப் (ரகுமான்) உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருப்பார்.
ரகுமானுக்கு 13 வயது இருக்கும் போதே அவர் தந்தை சேகர் இறந்து போனார்.
குடும்பம் வறுமையில் வாடியது.
வீட்டில் இருந்த தந்தைக்குச் சொந்தமான இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டே, பிழைக்க வேண்டி இருந்தது.
அப்போது ரகுமான் பிரமாதமாக கீ-போர்டு வாசிப்பார்.
பல ஸ்டுடியோக்களுக்கு அவரை, அர்ஜுனன் அழைத்துச் சென்று ‘ திறமையான பையன்.நல்லா கீ-போர்டு வாசிப்பான்.. சான்ஸ் கொடுங்கள்’’ என்று சிபாரிசு செய்தார்.
(அப்போது அர்ஜுனன் கைவசம் படங்கள் இல்லை)
‘’கீ.போர்டையே கையில் தூக்க முடியாத அளவுக்கு ஒல்லிப்பிச்சானா இருக்கான். அவனுக்கு எப்படி சான்ஸ் கொடுப்பது. அவன மொதல்ல ஸ்கூலுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணுஙக’’ என்று அர்ஜுனனை ஏளனம் செய்தனர்.
ஏ.ஆர்.ரகுமானை பெரிய ஆளாக்கியே தீருவது என்று சபதம் செய்தார், அர்ஜுனன்.
1981 ஆம் ஆண்டு தான் இசை அமைத்த ‘அடிம சங்கிலா’ என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு கீ-போர்டு வாசிக்கும் வேலை கொடுத்தார்.
இது தான் சினிமாவில் ஏ.ஆர். ரகுமானுக்கான வாசலாக அமைந்தது.
அந்த பாடலும், இசையும் பேசப்பட்டது.
அதன் பின் அர்ஜுனனின் ஒவ்வொரு பாடலுக்கும் , ரகுமான் தான் கீ போர்டு பிளேயர்.
இப்படியாக ரகுமான் உயரத்துக்கு காரணமாக இருந்த அர்ஜுனன் தான், கே.ஜே.ஜேசுதாஸின் ,முதல் பாடலுக்கு இசை அமைத்தவர்.
ஆனால் அது சினிமா பாடல் அல்ல.
ஒரு நாடகத்துக்கான பாடல்.
இரு ஜாம்பவான்களை உருவாக்கிய, மாஸ்டர் இன்று இல்லை.
சினிமா வட்டாரத்தில் அவரை ‘அர்ஜூனன் மாஸ்டர்’’ என்று தான் அழைப்பார்கள்.
கடைசி வரை ரகுமானை ‘ திலீப்.. திலீப் ‘ என்று அழைத்து வந்த ,ஒரே ஆத்மா- அர்ஜுனன் மட்டுமே.
– ஏழுமலை வெங்கடேசன்