அகமதாபாத்
அகமதாபாத் மணிநகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற நிர்மலா சீதாராமனுக்கு ஒரு இளைஞர் கறுப்புக் கொடி காட்டி உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மத்திய பா ஜ க அரசின் அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் அகமதாபாத் மணி நகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். மணிநகர் தொகுதியை சேர்ந்த அமரவாடி மற்றும் கோக்ரா பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். மோடி பிரதமராவதற்கு முன்பு மணிநகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
வாக்கு சேகரிக்க வந்த நிர்மலாவுக்கு பா ஜ க தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை, மேளதாளங்குடன் நடந்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர், “பா ஜ க வின் ஒவ்வொரு தொண்டருக்கும் கட்சி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உள்ளது. அதனால்தான் நானும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.” என கூறினார். பின்பு அவர் மேள தாளங்களுடன் தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு தமிழ்சங்க பொருளாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அவர் வீடுகளுக்கு இடையில் சென்றுக் கொண்டிருந்த போது. மகேஷ் பட்டேல் என்னும் மத்திய வயது இளைஞர் ஒரு வர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி தனது எதிர்ப்பை தெரிவித்தார். “நான் ஒரு படேல் இனத்தவன். பா ஜ கவில் 20 வருடங்களாக இருந்து வருகிறேன். பா ஜ க வினர் பொதுமக்களின் பணத்தை வெகுவாக கொள்ளை அடித்து வருகின்றனர். இந்த தொகுதிகளின் சாலைகளை பழைய மற்றும் தரமற்ற கற்களால் உருவாக்கி உள்ளனர். இது பற்றி நான் அளித்த புகார்களை எந்த ஒரு பா ஜ க தலைவரும் கண்டுக் கொள்ளவில்லை” என கூச்சலிட்டார். இது அந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.