புதிய தலைமுறைக்கு நம்பிக்கையூட்ட திரண்ட சவுதி அரேபிய பெண்கள்
ரியாத், மார்ச் 11 , சனிக்கிழமை அன்று ரியாத் நகரில் தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைத்த, பணிக்குச் செல்லும் பெண்களுக்கான தொண்டு நிறுவனமான அல்வலீட் மனிதநேயக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் மாநாட்டில், சவுதியின் தீரச்செயல் புரிந்த பெண்மணிகளிலிருந்து ஆராய்ச்சியாளர் பெண்கள்வரை தாம் எவ்வாறு தீவிர பழமைவாத ராஜ்யத்தில் புதிய வாய்ப்புகளைத் தேடி வெற்றிபெற்றோம் எனும் அனுபவங்களைப் பரிமாறிப் புதிய தலைமுறை இளம் பெண்கள் ஊக்குவித்தனர்.
பெண்கள் ஒரு ஆண் பாதுகாவலர் மேற்பார்வையின் கீழ் வாழும் அவல நிலையில் உள்ள, பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை மறுக்கப்படும் , உலகின் அதிகளவு பாலினம் ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் , சீர்திருத்தங்கள் மெதுவாகப் பெண்கள் வாழ்க்கையை பாதிக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் சுமார் 200 பெண்கள் கலந்துக் கொண்டனர்.
எண்ணெய் வளத்தை நம்பிய பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அரேபிய அரசு “ விஷன் 2030”கீழ் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்று பெண்களுக்கு வேலைவாய்ப்பை உயர்த்துவது. இதன் மூலம், பெண்கள் இப்போது அரசாங்க ஆலோசனை ஷூரா சபையில் பங்குபெற முடியும், முனிசிபல் தேர்தல்களில் வாக்களிக்க முடியும், சில சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோட்டல்களில் வேலை செய்ய முடியும் .
இந்த மாநாட்டில், பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் சவுதி பெண்கள், சிறப்பு விருந்தினர்களாக வந்த பிரிட்டிஷ் பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் செர்ரி பிளேயர் போன்ற சர்வதேச பேச்சாளர்கள் உடனிணைந்து மேடையில் தோன்றி உரையாற்றினர்.
அல்வலீட்பின் மனிதநேயக் குழுவின் பொதுச்செயலாளரான இளவரசி லமியா பின்ட் மஜீட் அல் சவுத், “சவுதி பெண்களால் முடியும்” எனும் முழக்கத்துடன், பெண்களின் சாதனைகள்மீது அடுத்த தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்து அவர்களை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப் படுவதாய் தெரிவித்தார்.
2013 ல் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் சவூதி பெண் என வரலாற்றில் பதிவு செய்த ராகா மொகாரக் ( Raha Moharrak, வயது 31) பேசுகையில், “ சவுதி அரேபிய பள்ளிகளில், பெண் குழந்தைகள் ஆண்களைவிட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று கற்பிக்க வேண்டும்” என்றார்.
“எனது பயணம் ஒரு மினி-கிளர்ச்சியாக தொடங்கியது … உண்மையில் நான் என் பெற்றோர் அதிர்ச்சி அளிக்க வேண்டும் என விரும்பினேன். வெளிநாட்டில் படித்தபிறகு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். மலை ஏற அனுமதிக்கத் தயங்கிய என் தந்தையை ஒரு வழியாய் விளக்கம் கொடுத்து அவர் மனதை மாற்றினேன் “ என்றும் ராகா கூறினார்.
“ நான் என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபின் , அனைவரும் என்னை ஒரு குறிப்பிட்ட பெட்டியில் அடைந்துவிட வேண்டும் என நினைத்தனர். ஆனால் நான் என் லட்சியத்தை கைவிடத் தயாராக இல்லை” என்று ராகா கூறினார்.
ஏனைய பேச்சாளர்களில் குறிப்பிடத் தக்கவர், சைகை மொழியை எழுத்தாய் மாற்றும் ஒரு ஸ்மார்ட் கையுறை கண்டுபிடித்த ஹடில் அயூப்பைக் (Hadeel Ayoub) ஆவார்.
ஒரு மாநகர சபை தேர்தலில் வெற்றிபெற்று, அவரது ஆண் சகாக்கள் அவரை ஒரு தனியான அறையில் உட்கார்ந்து பணிபுரிய வலியுறுத்தியதை எதிர்த்துப் பதவியை ராஜினாமா செய்த லாமா அல் சுலைமானும் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். லாமா சுலைமான் பேசுகையில், “”இன்று தலைமை பதவிகளைப் பெண்கள் வகிக்க வேண்டியது மிக அவசியம். எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
” தடைகள் எவ்வளவு இருந்தாலும், வாய்ப்புகள் நிறைய காத்திருக்கின்றன” என்று இளைய தலைமுறையினருக்குக் காட்ட முன்மாதிரியாகத் தற்போதைய சாதனைப் பெண்மணிளை சவுதிக்கு காட்ட விரும்பினேன் “என்று இளவரசி லமியா கூறினார்.
சவூதி பெண் பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி வழங்க தொண்டு நிறுவனத்துடன் தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை பங்குதாரராக உள்ளது.
பிளேயர் பேசுகையில், “பெண்களுக்குச் சமத்துவம் எனும் உலகத்தின் கோரிக்கை”க்கு உரம் சேர்க்கும் விதமாகச் சவுதி பெண்கள் பங்காற்றீவருவதால் நான் ரியாத்தில் உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில் பூரிப்படைகின்றேன். நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான அச்சாரத்தை என்னால் உணர முடிகின்றது” என உற்சாக மூட்டினார்.
“கிங் செளத் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியரும் சபாநாயகருமான இக்பால் தரன்தாரி ( Eqbal Darandari), 2016 இல் ஷூரா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசுகையில், “ பெண்கள் பொறுப்பு மற்றும் தலைமைப்பண்பைக் கற்றுக்கொண்டது மிகவும் அவசியமான ஒன்று. நாம் குறை மட்டும் கூறுவதை நிறுத்திவிட்டு, சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற உழைக்க வேண்டும் “என்று கூறினார்.
பெண்களின் பொருளாதார மற்றும் அரசியல் பங்கேற்பு, சுகாதார மற்றும் கல்வி கட்டணம் எப்படி உள்ளது என ஒரு உலக பொருளாதார மன்றம் ஆய்வு. 144 நாடுகளில் உலகளாவிய பாலின இடைவெளியைக் கடைபிடிக்கும் நாடுகளில் 141 வது இடத்தில் உள்ளது சவூதி அரேபியா. இந்தியா 87வது இடத்தில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
குடும்ப தொடர்பில்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தித்துக் கொள்வதில் கடுமையான நிபந்தனைகள் உள்ளன. பொது இடங்களில் அனைத்து பெண்களும் தலை முதல் கால் கருப்பு பர்தாவை அணிய வேண்டும். பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் கிடையாது, அதாவது எப்பொழுதும் பெண்கள் பயணியாய் தான் இருக்க முடியும்.
இந்த மாநாட்டில், ஆண் பங்கேற்பாளர்கள் பெண் பார்வையாளர்களுக்குப் பின்னால், கடைசியில், ஒரு திரைக்குப் பின்னால் அமர்ந்து மாநாட்டில் பங்கேற்றனர்.
நன்றி: தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை மற்றும் அல்வலீட் மனிதநேயக் குழு