காந்திநகர்,

குஜராத்தில் இந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி குஜராத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதியஜனதா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றுதேர்தல் ஆணையம் ஏற்கனவே  அறிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் படி, குஜராத்தில்  பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சமவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

20 ஆண்டுகளாக குஜராத் ஆண்டுவரும் பாரதியஜனதா, தற்போது நாட்டில் அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வியாபாரிகள் குஜராத்தில் உள்ளனர். அவர்கள் மோடி அமல்படுத்திய புதிய திட்டங்களால் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக, அங்கு அதிகமாக வசித்து வரும் பட்டேல் இனத்தவர்கள் கூறி உள்ளனர். பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

இதன் காரணமாக குஜராத்தில் பாஜக தனது செல்வாக்கை படிப்படியாக இழந்து வருகிறது. தற்போதைய நிலையில், குஜராத்தில் பாஜகவும், காங்கிரசும் ஒரே நிலையில் இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சிடிஎஸ் – லோக்நிதி நடத்திய இறுதி கட்ட கருத்துக்கணிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் 43 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒரே நிலையில் இருப்பதாக கூறி உள்ளது. மேலும், தற்போதைய நிலவரப்படி பாஜகவின் செல்வாக்கு 16 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 59 சதவிகித வாக்குகள் பெறும் என்ற நிலையில் தற்போது எடுத்துள்ள கருத்து கணிப்பில் 43 சதவிகித வாக்குகளே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது ஆகஸ்டு மாதத்தில் 59 சதவிகிதம் இருந்த பாஜக ஆதரவு படிப்படியாக குறைந்து, அக்டோ பரில் 47 சதவிகிதாகவும், நவம்பரில் அது 43 சதவிகிதமாவும் கடந்த 4 மாதத்தில் 16 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது என்றும் கூறி உள்ளது.
 
அதே நேரத்தில், கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது இழந்த செல்வாக்கை மீட்டு வருகிறது.

அதாவது, கடந்த  ஆகஸ்டு மாதத்தில் 29 சதவிகிதமாக  இருந்த காங்கிரஸ் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து, அக்டோபரில் 41 சதவிகிதாகவும், நவம்பரில் அது 43 சதவிகிதமாவும் உயர்ந்து பெரும் சாதனை படைத்துள்ளது.  கடந்த 4 மாதத்தில் 14 சதவிகித வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது. 

அதேவேளையில், பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்தும் கருத்து கணிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் 82 சதவிகிதம் பெற்றிருந்த அவரது புகழ் படிப்படியாக குறைந்த தற்போது 64 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இது மோடிக்கு மிகப்பெரிய சரிவு என்றும்,

அதே வேளையில், ராகுல்காந்தியின் மதிப்பு  40 சதவிகிதத்திலிருந்து 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும் இந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த சிடிஎஸ் – லோக்நிதி நடத்திய இறுதி கட்ட கருத்துக்கணிப்பின்படி, குஜராத்தில் பெண்களின் வாக்கு காங்கிரசுக்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு   கடந்த நவம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை, 50 தொகுதிகளில் உள்ள 200 வாக்கு மையங்களில் 3,655 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது என்றும் அந்நிறுவனங்கள் கூறி உள்ளது.

இதன் காரணமாக குஜராத்தில் பாரதியஜனதா கட்சி கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருந்த நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு பாஜகவினரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியா டுடே – ஆக்சிஸ் கருத்து கணிப்பிலும், டைம்ஸ் நவ்-விஎம்ஆர் கருத்துக் கணிப்பிலும் பாரதியஜனதா வெற்றி பெறும் என்றும், முன்பைபோல பெரும் வெற்றிபெற முடியாது, குறைந்த அளவு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.