சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஜனவரி 6ந்தேதி உருவாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை இன்னும் தமிழ்நாட்டிலிருந்து முழுமையாக விலகாத நிலையில், வங்கக்கடலில் உருவாகும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகளால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், வரும் ஜனவரி 6-ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓரிரு மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இது புயலாகவோ அல்லது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவோ வலுப்பெறாது எனத் தெரிகிறது.
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் இரண்டு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சிகளின் காரணமாக, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 21 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. கோத்தகிரியில் 11 செ.மீ., கீழ் கோத்தகிரியில் 7 செ.மீ., கெத்தையில் 6.6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாலை நேரத்தில் பனிமூட்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், ஜனவரி 6-ஆம் தேதி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், அதற்கேற்ப அடுத்தடுத்த மழை முன்னறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]