சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒருவருக்கு அதிகபட்சம் 12 பாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும என , டாஸ்மாக் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியானது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் மது விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழக தேர்தல் நடத்தை விதிகளால் டாஸ்மாக் மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் 4.5 லிட்டர் மது அல்லது 12 பீர் பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை என டாஸ்மாக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் முடியும் வரை ஒரு தனிநபருக்கு குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
வீரியம் மிக்க மதுபானங்கள் (Hard Liquor) அதிகபட்சம் 4.5 லிட்டர், பீர் (Beer) அதிகபட்சம் 7.8 லிட்டர், ஒயின் (Wine) அதிகபட்சம் 9 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் ஒரு நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும். ஐ.எம்.எஃப்.எல் அல்லது இறக்குமதி மதுபானம் 6 முழு பாட்டில்கள் (750ml) அல்லது 12 அரை பாட்டில்கள் (375ml) அல்லது 24 குவார்ட்டர் பாட்டில்கள் (180ml). பீர், அதிகபட்சம் 12 பாட்டில்கள் (650ml).
டாஸ்மாக் மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி, அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர். மது விற்பனை அனைத்தும் கணினி மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் விற்பனை நடந்தால், கணினித் திரையில் அது உடனடியாகத் தெரியவரும். விதிகளை மீறி ஒரே ரசீதில் (Single Bill) கூடுதல் மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மொத்த விற்பனை (Bulk Sales) என்றால் என்ன என்பதில் தெளிவு இல்லை என மேற்பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளை விட 50% கூடுதல் ஸ்டாக் வைத்திருக்கக் கூடாது. சட்டவிரோதமாக மதுவை இருப்பு வைப்பதோ அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விற்பனை செய்வதோ கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
[youtube-feed feed=1]