சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை அக் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்தார். இது குறித்து பல்வேறு மட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன. “சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தையே இது வெளிப்படுத்துகிறது” என்று பலரும் தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில், “தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது, சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் ஆகாது. அவர் ஏற்கெனவே அக் கட்சி சார்பில் எம்.பியாக இருந்தவர்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தாக தகவல் பரவியது.
இதை திருநாவுக்கரசர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக தினககரன் நியமிக்கப்பட்டது குறிதுத செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது அவர்களது உட்கட்சி பிரச்சினை. அது குறித்து காங்கிரஸ் சார்பில் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றுதான் நான் பதில் சொன்னேன். இது எல்லா இதழ்களிலும் வெளியாகி உள்ளது.
தினத்தந்தி இதழில் மட்டும், தினகரனை நியமித்ததில் சசிகலா குடும்ப தலையீடு இல்லை என நான் தெரிவித்ததாக வெளியாகி உள்ளது. இதற்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாருக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறதோ அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்தாகும். அ.தி.மு.கவில் நடக்கும் நீக்கம், சேர்த்தல், பதவி அறிவிப்பு எல்லாம் அக் கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். இதில் காங்கிரஸ் கட்சி கருத்து சொல்ல ஏதுமில்லை” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.