புதுடெல்லி: ரயில்வேயில் தான் ரத்துசெய்த பயணச்சீட்டுக்கு சேவைக் கட்டணமாக ரூ.35 கூடுதலாக கழிக்கப்பட்டதற்காக, அந்தத் தொகையை திரும்ப செலுத்தக்கோரி சுமார் 2 ஆண்டுகளாக போராடிய ஒரு பொறியாளர், இறுதியில் ரூ.33ஐ திரும்ப பெற்றுள்ளார். கடைசியில், இதிலும் ரூ.2 கழிக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் தேதி, கோட்டாவிலிருந்து புதுடெல்லிக்கு செல்வதற்காக, ஏப்ரல் மாதத்தில், கோல்டன் டெம்பிள் ரயிலில் பயணச்சீட்டு பெற்றார் அந்த நபர்.

பயணச்சீட்டுத் தொகை ரூ.765. அப்போது, அவரின் பயணச்சீட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. பின்னர், இவர் தனது பயணச்சீட்டை ரத்து செய்தார். ரத்து செய்தல் கட்டணமாக ரூ.100 கழிக்கப்பட்டு, ரூ.665 வழங்கப்பட்டது.

ஆனால், ஜிஎஸ்டி அமலாக்கம் செய்வதற்கு முன்னதாகவே தன்னுடைய பயணச்சீட்டை ரத்து செய்தாலும் கூடுதலாக ரூ.35ஐ சேவை வரியாக ரயில்வே நிர்வாகம் வசூலித்து விட்டதாக புகார் கூறி, தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்தார் அவர்.

இறுதியாக, 2 ஆண்டுகளுக்குப் பின்னர், தான் திரும்பக் கேட்ட தொகையிலிருந்து ரூ.2 கழிக்கப்பட்டு ரூ.33 ஐ பெற்றுள்ளார் அந்த அசராத மனிதர்.