சென்னை: சொத்துக்குவிப்பு குற்றவாளியான சசிகலா சிறைதண்டனை முடிந்து நேற்று தமிழகம் திரும்பினார். அவர் சென்னை வர 22 மணி நேரம் ஆனது. அந்த அளவுக்கு அவரது காரை நிதானமாக ஓட்டி வந்த டிரைவர் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். பின்னர் 10 நாட்கள் பெங்களூருவில் ஓய்வு எடுத்துவிட்டு, நேற்று காலை தமிழகம் புறப்பட்டார். இதன் பிறகு நேற்று காலை 7.45 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்ட சசிகலா சுமார் 22 மணி நேரம் பயணம் செய்து நள்ளிரவு சென்னை திநகரில் உள்ள வீட்டுக்கு வந்தடைந்தார்.
முன்னதாக சசிகலாவுக்கு அமமுக சார்பில் வழியெங்கிலும் பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியாகியை வரவேற்பது போல, குற்றவாளியான சசிகலாவை வரவேற்க கோடிக்கணக்கான ரூபாய் தண்ணீராக செலவழித்து ஆடம்பரம் செய்தனர். இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சசிகலாவுக்கு கார் ஓட்டிய (உருட்டிய) நபர் யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை முடியும் என்ற நிலையில், 22 மணிநேரமாக காரை உருட்டி வந்த நபர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் டிரைவர் பிரபு என்பது தெரிய வந்துள்ளது. டிரைவர் பிரபு ஜெயலலிதாவுக்கு சுமார் 25 ஆண்டுகாலம் கார் ஓட்டியவர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், டிரைவர் பிரபு வெளியே தலைக்காட்டாத நிலையில், நேற்று திடீரென சசிகலாவுக்கு கார் ஓட்டியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரைவர் பிரபு, கடந்த 4 ஆண்டுகளாக எங்கே இருந்தார், அவர் தலைமறைவாக இருந்தாரா, அல்லது சசிகலாவின் பாதுகாப்பில் இருந்தாரா? ஏன் தலைமறைவாக இருந்தார் என்பது சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
ஜெயலலிதா மறைவு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், டிரைவர் பிரபுவிடம் விசாரணை நடத்தியதா? காவல்துறை விசாரணை நடத்தியதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போது, ஜெயலலிதாவின் டிரைவர் பிரவுவையே, சசிகலாவும் தனக்கு டிரைவராக பயன்படுத்தி வருகிறார்.