
சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் அரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஜெய்சிங் பல்வந்த் சிங் சகோதரர்கள் அரியானா மாநிலத்தில் சரஸ்வதி என்கிளேவ் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். இருவரும் வெல்டிங் வேலை செய்துவந்தனர்.
இந்த நிலையில் ஜெய்சிங், ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்துகிடந்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. விரைந்து சென்று அவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தோம். அப்போது, அவரின் தம்பி பல்வந்த் சிங்தான் அண்ணனைக் கொலைசெய்தார் என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தோம்” என்றனர்.
போலீஸாரிடம் பல்வந்த் சிங் கொடுத்த வாக்குமூலத்தில், “என் மூத்த சகோதரர் ஜெய்சிங், வீட்டுக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார். இது, எனக்குத் தொந்தரவாக இருந்தது. மேலும், தொடர்ந்து என்னையே சமைக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவார். கடந்த மூன்று நாள்களுக்கு முன், எங்களுக்குள் சண்டைவந்தது. அப்போது, ‘நீயே சமையல் செய்துகொள்’ என்று அவரிடம் நான் கூறினேன்.
ஆனால், சம்பவத்தன்றும் அவர் வழக்கம்போல தாமதமாகவே வீட்டுக்கு வந்தார். என்னை சமைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரின் தொண்டையில் கத்தியால் வெட்டிக் கொலைசெய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
சமையல் செய்வதில் நடந்த தகராறில் அண்ணனைத் தம்பி கொலைசெய்த சம்பவம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]