பாரிஸ்
மலி நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் நான்காம் மாடியில் இருந்து தவறி விழுந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றி உள்ளார்.
அனிமேஷன் கதைகளில் உலகப் புகழ் பெற்ற கதைகளில் “ஸ்பைடர்மேன்” ஒன்றாகும். சிலந்தியின் முகமூடி அணிந்த கதாநாயகன் தனது கையில் இருந்து சிலந்தி நூலை அனுப்பி கட்டிடத்துக்கு கட்டிடம் தாவி துயருறும் மக்களுக்கு உதவி செய்வதே இந்தக் கதைகளின் அடிப்படை ஆகும். அது போல உண்மை நிகழ்வு ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிசின் கசாமா என்னும் வாலிபர் வசித்து வருகிறார். 23 வயதான இவர் ஆப்பிரிக்க நாடான மலியில் இருந்து குடி பெயர்ந்தவர். ஒரு நாள் பாரிஸ் நகரில் ஒரு கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்து விழுந்த ஒரு குழந்தை தொங்கிக் கொண்டிருந்துள்ளது.
அடுத்த பால்கனியில் இருந்த கசாமா உடனடியாக ஸ்பைடர்மேன் போல ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி அந்த 4 வயது குழந்தையை காப்பாற்றி உள்ளார். இதை வீடியோ படமாக்கியவர்கள் சமூகவலை தளங்களில் பதிந்து அது வைரலாகியது.
பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ அவரை நேற்று நேரில் அழைத்து கௌரவித்துள்ளார். அப்போது கசாமா “ஒரு குழந்தை அவ்வாறு விழுந்ததை என்னால் பொறுக்க முடியவில்லை. உடனடியாக நான் என்னை மறந்து பால்கனிக்கு தாவினேன். இதற்கு காரணமான கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.