சென்னை: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த் தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், ’’இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.