நெட்டிசன்:
கவிதா குமார் அவர்களின் முகநூல் பதிவு:
வணக்கம் கமல். நீங்கள் நலமா?
களத்தூர் கண்ணம்மா முதல் இன்றுவரை உங்களின் திரை முகங்களை ரசித்து வரும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். மெய்வருத்தம் கூலி தரும் என்பார்கள். உங்களை வருத்தி நீங்கள் ஏற்றுக் கொண்ட வேடங்களால், தமிழக ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்திருக்கிறீர்கள்.
அடிக்கடி பொதுவெளியில் உங்களை இப்போது பார்க்க முடிகிறது. உங்கள் பேச்சுகளைக் கேட்க முடிகிறது. உங்கள் பேச்சை, கோனார் உரையில் ஆழமாக தேடினாலும் அர்த்தம் அறிய முடிய வில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாததால், அந்த தாழ்வுமனப்பான்மை தெரியக்கூடாது என்பதற்காக, தனிமொழியில் நீங்கள் எழுதுவதாக சொல்வோரும் உண்டு. இதனால் உங்கள் “டிவிட்” ஒவ்வொன்றுக்கும் சமூக வலைத்தளங்களில் புதிய, புதிய அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. எழுத்தாளர் மாலன் பக்கங்களில் அப்படியான அர்த்தங்களை பின்னூட்டங்களிப் படித்து தெளிவடைந்து கொள்கிறேன்.
உண்மையான பிக்பாஸ்
——————————————-
தனியார் தொலைக்காட்சியில் நீங்கள் நடத்தி வரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியைப் போலத்தான், தற்போது தமிழக அரசியலும் மிகக்குழப்பமாக, பொரணி பேச்சாக மாறியுள்ளது. ” பிக்பாஸ்” தரும் டாஸ்க்கை போலவே, தமிழக அரசியலிலும் ” பாஜக பிக்பாஸ்” தரும் டாஸ்கை, அமைச்சர் பெருந்தகைகள் நன்றாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் திடீர் புளியோரதை, திடீர் சாம்பார் சாதம், திடீர் சாமியாடி போல ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்று நீங்கள் இறங்கியுள்ளது பெரும் ஆச்சரியம் தான் கமல். சமூகத்தைப் பீடித்த கரையானான ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எள்ளவும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஊழல் மட்டும் தான் இந்தியாவின் பெரும் பிரச்னையா? தலைநகர் டெல்லியில் ஊழலைப் பேசியே ஆட்சிக்கு கெஜ்ரிவால் வந்தது போல, தமிழகத்தில் திடீரென ஊழலைப் பேசி நீங்கள் ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு காண்கிறீர்களா? அதற்காகத் தான் உங்களின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு கெஜ்ரிவாலை அழைத்து வந்தீர்களா?
கடவுள் கதை
—————————
இதுவரை உங்களைக் கருப்புச்சட்டைக்காரன், சிவப்புச்சட்டைக்காரன் என்றெல்லாம் பலர் பேசி வந்தனர். அதை நீங்கள் எப்போதும் மறுத்ததில்லை. ” கடவுள் இல்லையென்பவனை நம்பி விடலாம். கடவுள் இருக்கிறது என்பனையும் நம்பி விடலாம். ஆனால், கடவுள் நான் தான் என்பவனை நம்பக்கூடாது” என்ற உங்கள் வசனத்தைக் கேட்டு தமிழகத்தில் கைதட்டி மகிழ்ந்த கூட்டம் அதிகம். ஆனால், ஒரு போதும் நீங்கள் கடவுள் இல்லையென்று சொன்னதேயில்லை. முன்பு துவக்கப்பள்ளியில் சேர்க்க தலையைச் சுற்றி காதைத் தொடச் சொல்லும் டெக்னிக் தான், கடவுள் விஷயத்தில் நீங்கள் கையாளுவதும். இந்நிலையில், திடீரென காவிக்குள் கருப்பு அடக்கம் என ஒரு கருத்தைச் சொல்லி உங்கள் முகவிலாசத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பிரமாதம்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், திடீரென தமிழக அரசியலில் அதுவும் ஆளுங்கட்சியினரின் ஊழல் குறித்து நிறைய மேடைகளில் பேச ஆரம்பித்தீர்கள். பிக்பாஸ் மேடையையும் அதற்கு பயன்படுத்திக் கொண்டீர்கள். அதுசரி, இதுவரை ஊழல் ஒழிப்பில் உங்கள் பங்கு என்ன? வருமானவரி முறையாக கட்ட வேண்டும் என்பது கடமை. அது மட்டும் அரசியலுக்கு போதுமா?
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 1 லட்சம் கோடி ரூபாய் கிரானைட் ஊழல் முறைகேட்டைக் கண்டுபிடித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு, மாநில அரசுகள் அளித்த பரிசு 20க்கும் மேற்பட்ட இட, பணிமாறுதல்கள். இதனால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று இளையதலைமுறையைத் தயார் செய்யும் சகாயத்தின் பணிக்கு கிடைக்கும் மரியாதை என்பது இழப்புகளால் உருவானது. அப்படியான இழப்புகளை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் கமல்?
ஊழல் பேர்வழிகள் யார்?
——————————————–
அரசியல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளீர்கள். மகிழ்ச்சி. அதை எங்கிருந்து துவங்குவது? ஊழலில் இருந்தா? சரி… துவங்கலாம். ஊழல் என்பது குறித்து நீங்கள் பேச ஆரம்பித்து விட்டால், மாநில ஆட்சியை மட்டும் பேசுகிறீர்களே? மத்திய ஆட்சி பாஜக ஆட்சியில் ஊழலே நடக்கவில்லையா? அதை நீங்கள் இதுவரை பேசியுள்ளீர்களா? இனியாவது பேசுவீர்களா? பேசமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தை, தமிழகத்தில் துவக்கி வைத்தவர் நீங்கள் என்பதை நான் மறந்து விடவில்லை.
உலகம் முழுவதும் பரவியுள்ள மிகப்பெரிய கிருமி ஊழல் என்பதை நான் மறுக்கவில்லை. டரான்பரன்சி இன்டர்நேஷனர் நிறுவனம், ஆசிய கண்டத்தில் அதிக ஊழல் மலிந்துள்ள நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை ” மக்கள் மற்றும் ஊழல் – ஆசிய பசிபிக் – குளோபல் ஊழல் பாரோமீட்டர்” என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டது. ஊழலில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அறிக்கையில், ” கடந்த 2015ம் ஆண்டு ஜூலை முதல் 2017ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்ற அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. அதில், ஊழல் பட்டியலில் இந்தியா (69 சதவீதம்) முதலிடத்திலும், ஜப்பான் (0.2 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளது” என்று கூறியுள்ளது.
இந்தியாவை தற்போது ஆட்சி செய்வது யார்? பாஜக தலைவர்கள் பலர் பெருமுதலாளிகளுடன் கூட்டு சேர்ந்து நடத்திய ஊழல் பட்டியலை பல பத்திரிகைகள் ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளனவே. அந்த பட்டியலை படித்திருக்கிறீர்களா மிஸ்டர் கமல்? இன்றும் மோடியின் நெருங்கிய சகாவாக உள்ள லலித்மோடி( பெயர் ஒற்றுமையைப் பாருங்கள் ) மீது 1700 கோடி ரூபாய் ஐபிஎல் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. அத்துடன் அவர் மீது 16 பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதனால் அவர் லண்டனுக்கு தப்பியோடினார். அவர் அங்கேயே குடியேற கையெழுத்திட்டவர் பாஜகவில் முக்கிய தலையான வசுந்தரா தான். லண்டனில் லலித்மோடி குடியேற இங்கிலாந்து அரசிடம் பரிந்துரை செய்தது பாஜக மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தான். 1700 கோடி ரூபாய் ஊழல் பேர்வழிக்கு பாஜக தலைவர்களான வசுந்தராராஜேவும், சுஸ்மா சுவராஜூம் தோள் கொடுத்தனரே… அப்போது நீங்கள் விஸ்வரூபம் படம் எடுக்க காலிஸ்தானில் பதுங்கி இருந்தீர்களா கமல்?
பங்காரு பற்றி தெரியுமா ஸார்?
———————————————————–
தற்போது தலித் வீடுகளில் சாப்பிடுவது போல பாவ்லா காட்டி வரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குநராக இருந்த அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மூன்று நாட்களுக்குள் ரூ.500 கோடி செலுத்தப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் எனச்சொன்ன பேர்வழிகள், கள்ளப் பணத்தை எப்படி மாற்றினார்கள் என்பதை பல ஊடகங்கள் வெளிப்படுத்தியதே… அதைப்பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களா கமல்?
மத்திய அரசியலின் நடக்கும் ஊழலை நான் பார்க்கமாட்டேன். மாநில அரசில் நடக்கும் ஊழலைத் தான் பார்ப்பேன் என்று நீங்கள் சொன்னால், அதற்கும் பட்டியல் தர முடியும். ஏனெனில், ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து பல மாநில அரசுகளை கபளீகரம் செய்துள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல் வீச்சத்தை பாரதமாதாவே பொறுத்துக் கொள்ளமாட்டாள். நீங்கள் எப்படி பொறுத்துக் கொள்கிறீர்கள் கமல்? பங்காருவை அடிக்கடி படத்தில் பேசுபவர்கள் நீங்கள். பாஜக தேசிய தலைவராயிருந்த பங்காரு லட்சுமணன் கட்டுக் கட்டாக லஞ்சப்பணத்தை வாங்கியதை படமெடுத்து தெஹல்கா நிறுவனம் வெளியிடப்பட்டபோது, அந்த நறுமணத்தில் மூழ்கியிருந்தீர்களா?
அதற்கு சரிபடமாட்டீர்கள்
—————————————–
மத்திய பிரதேசத்தில் அரசுப்பணியிடங்களை நிரப்ப 2 லட்சம் கோடி ரூபாய் பெற்று உலகை உலுக்கிய ” வியாபம் ஊழல்” நடந்த போதும், அவ்வழக்கில் தொடர்புடைய பலர் மர்மமாக இறந்த போதும் இந்தியாவில் நீங்கள் இல்லையா கமல்? 81 ஆயிரத்து 122 கோடி ரூபாய் கடன்கார அதானி குழுமம், ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுக்க பாரத அரசு வங்கி 6,200 கோடி ரூபாய் கடன் வழங்கியது. டிராக்டர் வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லையென வங்கி அதிகாரிகளால் மிரட்ட பலர், தமிழகத்திலேயே பலர் தற்கொலை செய்துள்ள நிலையில், பெரும் கடன்காரனுக்கு இவ்வளவு பெரிய தொகையை, அரசு வங்கியில் இருந்து வாங்கிக் கொடுக்க பிரதமர் மோடி எடுத்த முயற்சி ஊழல் முறைகேடு இல்லையா ? இதுகுறித்து எப்போதாவது திருவாய் மலர்ந்துள்ளீர்களா உலக நாயகனே ?
ஊழலை விட சமூகத்தில் பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது கமல்….. பசி, வறுமை, தீண்டாமை, பெண்ணடித்தனம் என பல முக்கிய விஷயங்களை பகிரங்கமாக பேச வேண்டும். ஒரு ஆட்சியின் முதல்வர் என்பவருக்கு சில துறைகள் ஒதுக்கீடு செய்திருந்தாலும், மற்ற அமைச்சர்களின் துறைகளையும் அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த விஷயங்களிலும் கடந்த 50 ஆண்டுகளாக வாய் திறக்காத நீங்கள், ஊழலை மட்டுமே பேசுகிறீர்கள். 100 நாட்களுக்குள் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என்று கூறுகிறீர்கள். கடைசியாக நான் சொல்வது இது தான்…. ஆளவந்தான் என நீங்கள் படம் எடுக்கலாம். ஆனால், நீங்கள் “அதற்கு” நீங்கள் சரிப்பட்டு வரமாட்டீர்கள் கமல்.
நன்றி.
ப்ரியமுடன்,
– ப.கவிதா குமார்