பெங்களூர்

தொழுநோயால் விழிகளும் விரலும் பாதிப்படைந்த ஒரு  பெண்ணுக்கு ஆதார் பெறுவதில் சிரமம் உண்டாகி இருக்கிறது.

பெங்களூர் மகடி சாலையில் ஒரு தொழு நோயாளிகள் மருத்துவமனை உள்ளது.  அங்கு குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சஜிதா பேகம் (வயது 65) என்னும் பெயருள்ள ஒரு பெண் உள்ளார்.  பத்து வருடங்களுக்கு முன் இந்த மருத்துவமனையில் அவரைச் சேர்த்த பின் அவரது குடும்பத்தினர் அவரை பார்க்கக் கூட வருவதில்லை.  அரசு அளித்து வரும் ரூ.1000 உதவித் தொகையைக் கொண்டு அவர் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில்  உதவித் தொகை பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது.  அதனால் ஆதார் அட்டை இல்லாத சஜிதாவுக்கு மூன்று மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்படுள்ளது.  ஆதார் அட்டை பெற சஜிதா முயன்றுள்ளார்.  ஆனால் தொழு நோயால்  விரல்கள் மற்றும் கண் பார்வையை முழுவதுமாக இழந்த நிலையில் அவர் உள்ளார்.  ஆதார் அட்டை வழங்க கை ரேகை மற்றும் கண் விழிகளின் புகைப்படம் முக்கியம் என்பதால் அவருக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.

இது குறித்து ஆவன செய்யுமாறு இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அரசைக் கேட்டுக் கொண்டும் எந்த பயனும் இல்லை.  இந்த மருத்துவமனையில் மொத்தம் உள்ள 57 பேர்களில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை உள்ளது.  இது குறித்து ஆதார் வழங்கும் அதிகாரி ஒருவர் ”இந்த நோயாளிகளின் புகைப்படத்துடன் கூடிய மருத்துவ சான்றிதழ் கொண்டு வந்தால்  அதைக் கொண்டு ஆதார் வழங்க அவர்களுடைய கருவிழிகளை இயந்திரம் மூலம் அடையாளம் காண முயற்சிக்கலாம்.  ஆனால் இயந்திரத்தால் அது முடியவில்லை என்றால் ஆதார் வழங்க முடியாது.  ஏதாவது ஒரு பயோ மெட்ரிக் அடையாளம் இருந்தால் தான் ஆதார் வழங்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

அடையாளங்கள் பாதிக்கப்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதும் வழி உள்ளதா என எழுப்பப் பட்ட கேள்விக்கு அவர் அதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.