வெனிஸ்: இத்தாலியின் சின்குஃபிரான்டி என்ற சிறிய நகரத்தில், ஒரு வீட்டின் விலை ரூ.85(தோராயமாக) என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இத்தாலியின் தெற்கு பகுதியிலுள்ள ஒரு சிறிய நகரம்தான் இந்த சின்குஃபிரான்டி. கொரோனா வைரஸால் உலகளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், இந்த நகரம் வைரஸ் தொற்று இல்லாத ஒன்று என்பதும் ஒரு கூடுதல் விசேஷ தகவல்.

இந்த சிறிய நிர்வாக நகரத்தின் மேயர் மைக்கேல கோனியா கூறியதாவது, “ஒரு வீட்டின் விலை ரூ.85 என்ற இனிய அறிவிப்பானது, பராமரிப்பற்று கிடக்கும் நகரின் சில பகுதிகளை சீரமைப்பதற்காகத்தான்.

ஏனெனில், இங்கு வாழும் பலபேர், பெரிய நகரங்களை நோக்கி சென்று விடுகிறார்கள். அவர்கள் சென்றபிறகு, அவர்கள் வாழ்ந்த வீடுகள் பராமரிப்பாளர் யாருமின்றி கேட்பாரற்று கிடக்கின்றன. இதனால், பல வீடுகள் காலப்போக்கில் இடிந்துவிழுகின்ற மோசமான நிலைமையை அடைவதோடு, ஆளரவமற்ற இடமாகவும் அந்தப் பகுதிகள் மாறிவிடுகின்றன.

எனவே, இந்த மோசமான நிலைமையை மாற்றும்பொருட்டு, மக்களை இந்தப் பகுதியை நோக்கி இழுக்கும் வகையில் இந்த ஆச்சர்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்றார். இந்தப் பகுதி ஒரு அழகிய இடமும்கூட.

இத்தாலியில் இத்தகைய அறிவிப்புகள், இதற்கு முந்தைய காலங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. சிறிய நகர்ப்புறங்களில் வசித்தவர்கள், தங்களின் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, பெரிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற காரணத்தால் அந்த அறிவிப்புகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.