விழுப்புரம்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளார்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பின் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு மாநிலம் எங்கும் பெருகி வருகிறது. மாணவர்கள் பல இடங்களில் போராட்டத்தின் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை சபரிமாலா என்பவர் நீட்டுக்கு எதிர்ப்பை காட்ட விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலரிடம் அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா தமது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தில் அவர், தாம் 2002 முதல் ஆசிரியப்பணி செய்து வருவதாகவும் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க தனது மகனையும் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரே கல்வி முறை நாடெங்கும் இல்லாததால் நீட் தேர்வு முறை சரியில்லை எனவும், இதை எதிர்த்து தாம் தாம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சம்பளம் அதிகரிக்க போராடும் ஆசிரியர்கள் சமத்துவக் கல்விக்காக போராடாததால் தாம் மனம் நொந்து ராஜினாமா செய்துள்ளதாக எழுதி உள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பலர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் இந்த காலத்தில் இது போல ஒரு ஆசிரியை இருப்பதையும், மாணவர் நலனுக்காக தனது அரசு பணியையே ராஜினாமா செய்யத் துணிந்ததையும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.