இவங்க அறிவுல தீய வைக்க…
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
“ஆளுநர் என்பவர் தபால்காரர் அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்படுவதால் அவரும் ஒரு வகையில் மக்கள் பிரதிநிதி தான்”
இதை யார் சொல்கிறார் என்றால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்ததாக உள்ள சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா.

மத்திய அரசின் சார்பாக அவர் வைத்த இன்னொரு வாதம், “ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அது காலாவதி ஆகி விட்டதாகத்தான் கருத வேண்டும்”
தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் நியமிக்கப்படுவதற்கும் வித்தியாசம் தெரியாதவர் சொலிசிட்டர் ஜெனரல்.
அப்படி என்றால் குடியரசுத் தலைவர் நியமிக்கிற எல்லாமே மக்கள் பிரதிநிதிகள் பதவிகள் தானா?
இந்திய குடிமகன், 35 வயது என்ற இரண்டு அம்சங்களே போதும் என்பது தான் ஆளுநர் நியமனத்திற்கான தகுதி.
இதுவே ஒரு கேவலமான அளவுகோல்.
அப்புறம், உலகிலேயே ஒப்பற்ற உயர்ந்த பதவி என்று மத்திய அரசு கருதும் ஆளுநராக யார் நியமிக்கப்படுகிறார்கள் என்று பாருங்கள்.
நேர்மையாளர்கள் ஆளுநராக நியமிக்கப்படுவது அரிதிலும் அரிதான விஷயம்.
பெரும்பாலும் இரண்டே கேட்டகிரியில்தான் வருவார்கள்.
ஒன்று அரசியல் கட்சியில் பல தில்லாலங்கடிகளை செய்து மேலே வந்தது கட்சித் தலைமையின் அல்லக்கை என்று பேரெடுத்தவர்கள்.
இரண்டாவது அரசாங்க உயர் பதவிகளில் இருந்து ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்பட்ட ஒயிட் காலர் கிரிமினல்கள்.
அப்படிப்பட்ட ஆளுநர்கள் லட்சக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் மசோதாவை செல்லாததாக ஆக்குவார்கள்..?
ஆட்சியாளர்களை நீதிமன்றங்கள் தீர்ப்பின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய வழி வகுக்கவில்லையா என்று கேட்கலாம்?

நீதிமன்றங்கள் சட்டங்களை ஆராய்ந்து அதன்படியே வெளிப்படையாக தீர்ப்பை அளிக்கின்றனர்.
ஆனால் இந்த ஆளுநர்கள் எதுவுமே சொல்லாமல் கிடப்பில் போடுவார்களாம்.
இதற்கு சப்போர்ட் செய்து ஒரு வாதம்.
மோடி அரசின் மசோதாவை ஜனாதிபதி முர்மு கிடப்பில் போட்டால் அமைதியாக இருப்பார்களா?
பயங்கரமாக கொந்தளிப்பார்கள். ஏனெனில் “ஜனாதிபதியே பிரதமரின் ரப்பர் ஸ்டாம்ப்” என்று காலம் காலமாய் கிண்டல் அடிக்கப்படுபவர்தானே.