சென்னை: சந்திரயான் – 2 விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய முக்கியமான கோளாறு, கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால், ரூ.978 கோடி செலவிலான திட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விண்கலத்தின் முன்னோக்கி செலுத்தி அமைப்பில் ஹீலியம் எரிபொருள் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. குழாய் அமைப்பில் உள்ள ஒரு இணைப்பு அடைப்பான் சரியாக இயங்கவில்லை.
இக்கோளாறை எளிதாக சரிசெய்துவிட முடியும் என்பதால், இதற்காக விண்கலத்தையே பிரிக்க வேண்டியதில்லை. கிரியோஜெனிக் இன்ஜின்களில் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. ஹீலியம் என்ற வாயுவை மட்டுமே, அதனுடைய சராசரி கொதிநிலை அளவிலேயே பயன்படுத்த முடியும்.
இந்தக் கொதிநிலை அளவு ஹைட்ரஜனைவிட குறைவானது. இதர வாயுக்கள் உறைந்துவிடுவதோடு, துகள்களையும் உண்டாக்கும். இதனால், முன்செலுத்தும் அமைப்பின் செயல்பாடு முடக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் ஜுலை மாத இறுதியில் செலுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.