2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெற்றுவருகிறார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகளில் விளையாட வந்துள்ள ஸ்பெயின் ஆடவர் ஹாக்கி அணியுடன் அதன் பயிற்சியாளர் ஜுவன் எஸ்காரே-வும் வந்துள்ளார்.
ஸ்பெயின் அணியின் துணை பயிற்சியாளராக உள்ள ஜுவன் எஸ்காரே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் அவருக்கு ஹாக்கி பயிற்சி அளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், “1996 முதல் ஒரு ஹாக்கி வீரராக பலமுறை இந்தியா வந்துள்ளேன் இங்கு சென்னை, சண்டிகர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விளையாடி உள்ளதோடு இங்கு எனக்கு நண்பர்களும் அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.
“2005ம் ஆண்டு எனது மனைவி கர்சியா-வை முதல்முறையாக இந்தியா அழைத்து வந்தபோது அவரும் இங்குள்ள கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுடன் ஐக்கியமாகி விட்டார்.
அப்போது முதல் எங்களுக்கு இந்தியா வருவது என்பது ஒரு புனித யாத்திரையாகவே இருந்து வந்தது. எங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளபோதும் எங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் முடிவெடுத்த போது “ஏன் ஒரு இந்திய குழந்தையை தத்தெடுக்கக்கூடாது ?” என்ற கேள்வி எங்கள் இருவருக்கும் இடையே எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு அரசின் அனுமதியுடன் இந்திய தன்னார்வ அமைப்புகளை தொடர்பு கொண்ட எங்களுக்கு கிடைத்தவள் தான் சௌமியா.
2 வயதில் டெல்லி ரயில் நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமியை காப்பகத்தில் வைத்து வளர்ந்துவந்த நிலையில் எங்களின் எதிர்பார்ப்புக்கான குழந்தை குறித்த தகவலை அந்த காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு பகிர்ந்தனர்.
இதனை அடுத்து இந்தியா வந்து சௌமியா-வை தத்தெடுத்தபோது அவளுக்கு வயது ஆறு, தற்போது எங்கள் மகளாக சௌமியா எஸ்காரே கர்சியா சோலாரே என்ற பெயருடன் வளர்ந்து வரும் அவள் எனது மூத்த மகளுடன் தனது சொந்த சகோதரி போல் வளர்ந்து வருகிறார்.
சௌமியா-விடம் இதுவரை நாங்கள் அவளது பிறப்பு குறித்து கூறவில்லை என்றபோதும் வளர்ந்து பெரியவளாகும் நிலையில் அவளே அதை உணர்ந்துகொள்ளும் சூழல் வரும் என்று தோன்றுகிறது.
தற்போது 12 வயதாகும் சௌமியா ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார் என்ற போதும் அவருக்கு ஸ்பெயின் நாட்டு ஜெர்சி அணிவதை விட இந்தியா நாட்டு ஜெர்சி அணிந்து விளையாடுவதில் தான் மகிழ்ச்சி அதிகம்” என்று சிரித்துக்கொண்டு பதிலளித்துள்ளார் ஜுவன் எஸ்காரே.