டில்லி
நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட புதிய வருமான வரித் திட்டம் குறித்த ஒரு ஆய்வு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித வரம்பை மாற்றி அறிவித்தார். அதன்படி ரூ.15 லட்சம் வரை வருட வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விகிதம் குறையும் என அறிவித்தார். அதையொட்டி மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்தனர். இதை மேலாக கேட்கும் போது பலரும் புதிய வருமான வரித்திட்டம் லாபகரமானது என எண்ணக் கூடும்.
ஆனால் இந்த புதிய வரித் திட்டத்தின் படி விகித மாற்றம் தேவை என்றால் முன்பு அளிக்கப்பட்ட தள்ளுபடி மற்றும் விலக்குகள் கணக்கில் சேர்க்கப்பட மாட்டாது என ஒரு விதிமுறை உள்ளதைப் பலர் கவனிக்கவில்லை. புதிய வருமான வரித் திட்டத்தின்படி வழக்கமான தள்ளுபடிகளான வீட்டு வாடகைப்படி, சேமிப்பு முதலீடுகள், பிராவிடண்ட் ஃபண்ட், பள்ளிக்கட்டணம், காப்பீடு தொகைகள், வீட்டுக் கடன் தவணை ஆகியவற்றுக்கு விலக்கு கிடையாது.
இந்த கணக்கைப் பார்த்தால் உதாரணமாக வருட வருமானம் ரூ.15 லட்சம் பெறுபவர் முன்பு வாடகைப்படியாக ரூ.3 லட்சம், வழக்கமான தள்ளுபடி ரூ.50000 ஆகியவை போக வரி செலுத்த வேண்டிய வருமானம் ரூ.11.5 லட்சமாகிறது. அதில் பிராவிடண்ட் ஃபண்ட், இதர சேமிப்பு, பள்ளிக்கட்டணம் போன்றவற்றுக்கு ரூ1.5 லட்சம் வரை விலக்கு உள்ளதால் வரி செலுத்த வேண்டிய தொகை ரூ.10 லட்சம் ஆகிறது. அதற்குப் பழைய முறைப்படி ரூ.1.17 லட்சம் வரி செலுத்த வேண்டும்.
ஆனால் புதிய வருமான வரி திட்டத்தின்படி ரு.15 லட்சம் வருட வருமானம் பெறுபவருக்கு எவ்வித தள்ளுபடியும் இருக்காது. எனவே ரூ.15 லட்சத்துக்கும் வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய வரி விகிதம் குறைவாக இருந்தாலும் இதற்கு வருமான வரி ரூ.1.95 லட்சம் செலுத்த வேண்டி வரும். இதனால் முந்தைய முறையை விட இது ரூ.78,000 அதிகரிக்கிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் புதிய முறை லாபகரமானது இல்லை எனவே சொல்ல முடியும்.