பரிணாம இயலின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ் என்ற புத்தகத்திற்கான குறிப்புகள் அடங்கிய கைபிரதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து திருடு போனது.
2001 ம் ஆண்டு இந்தப் புத்தகம் நூலகத்தில் இருந்து காணாமல் போனது இருந்தபோதும் இது வேறு எங்கும் தவறுதலாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று தீர்மானித்து தேட ஆரம்பித்தனர்.
நூலகத்தில் இருந்த 1 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள், கைபிரதிகள், வரைபடங்கள் என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்த பிறகு 2020 அக்டோபர் மாதம் இந்த புத்தகம் தொலைந்து போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
உளவுத்துறையினர் இது குறித்து சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலில் புகார் அளித்தனர். இருந்தபோதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த புத்தகத்தை பிங்க் நிற புத்தக பையில் போட்டு நூலக கண்காணிப்பாளர் அறைக்கு வெளியே பொது இடத்தில் விட்டு சென்றது தெரியவந்தது.
20 ஆண்டுகளுக்கு முன் நூலகத்தில் இருந்து திருடப்பட்ட புத்தகம் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பரிணாம வளர்ச்சி அடைந்த நூலகத்தின் கேமிரா இல்லாத பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது குறித்து நூலக இயக்குனர் ஜெசிகா கார்ட்னர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இன்டர்போல் மூலம் உலகெங்கும் தேடப்பட்டு வந்த பரிணாம இயலின் தந்தை சார்லஸ் டார்வினின் ‘ட்ரீ ஆப் லைஃப்’ எனும் வரைபடம் உள்ளிட்ட குறிப்புகள் எதுவும் சேதமடையாமல் நூலகத்திலேயே யாருக்கும் தெரியாமல் விட்டுச் சென்ற திருடன் நூலகருக்கு ‘ஈஸ்டர் வாழ்த்துகள்’ என்ற குறிப்பையும் கூட விட்டு சென்றுள்ளார்.