டெல்லி:

குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் உள்பட 59 மனுக்கள்  உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து, மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதி மன்றம், மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மசோதாவை ரத்து செய்யக்கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி, முன்னாள் திரிபுரா அரசர் பிரட்யோத் கிஷோர் தேப் (Pradyot Kishor Deb Barman)  உள்பட 59 மனுக்கள்  உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யாகாந்த் உள்பட 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்று விசாரணையின்போது, மசோதாவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து மத்தியஅரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மசோதா குறித்து தற்போதையே நிலையே நீடிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை ஜனவரி 22ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.