ஐதராபாத்:
தனது 74 வயதில் ஐவிஎப் மருத்துவ முறையில் இரட்டை குழந்தைகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த முதிய பெண்மணி. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ராஜா ராவ் மங்கம்மா தம்பதியினர். இவர்களுக்கு 1962ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் கோயில் குளங்களையும், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்க வில்லை. ஆனாலும், தங்களுக்கு சொந்தமாக ஒரு குழந்தை வேண்டும் என்று ஆவலுடன் காலத்தை ஓட்டிய நிலையில், தற்போது தனது 74வயது வயதில், ஐவிஎப் எனப்படும் சோதனைக் குழாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் மங்கம்மா… அதுவும் இரட்டை குழந்தையாக…..
இந்த தம்பதியினர் கடந்த ஆண்டுமுதல் குண்டூரில் உள்ள அகல்யா மருத்துவமனையை அணுகிய நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சோதனையில், மங்கம்மாவின் உடல்நிலை குழந்தை பெறுவதற்கான தகுதியுடன் இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து, ஐவிஎப் எனப்படும் செயற்கை கருவூட்டல் நிகழ்த்தப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். தற்போது அறுவை சிகிச்சை மூலம் அழகான இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளார் மங்கம்மா…
தள்ளாத வயதிலும் இரட்டை குழந்தை பெற்றெடுத்த மங்கம்மாவை அவரது கணவர் உள்பட சொந்த பந்தங்கள் வாழ்த்தி வருகின்றனர்.