நேபாளத்தில் ஆளும் கட்சி உடைகிறது.. பிரதமர் ஒளி புதுக்கட்சி தொடங்குகிறார்..
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. சர்மா ஒளி, பிரதமராக உள்ளார்.
இப்போது ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ( NCP ) இரண்டு பட்டு நிற்கிறது.
காரணம் என்ன?
‘’ஒருவருக்கு ஒரு பதவி’’ என்று கட்சியில் பலர் வலியுறுத்துகிறார்கள். இதன் பின்னணியில் முன்னாள் பிரதமரும், கட்சியின் ’இணை தலைவருமான’ பிரசண்டா உள்ளார்.
இதனை ஏற்கப் பிரதமர் ஒளி மறுத்து விட்டார்.
அவர் பிரதமராக இருப்பதோடு, கட்சியின் ‘இணைத் தலைவர்’ பொறுப்பிலும் உள்ளார்.
(NCP கட்சியில் இரு இணைத் தலைவர்கள்)
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கடந்த சில வாரங்களில் எட்டு முறை கூட்டப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ‘’ நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உடைப்பதில் பிரதமர் ஒளி பிடிவாதமாக இருக்கிறார்’’ எனக் கட்சியின் மற்றொரு இணைத் தலைவர் பிரசண்டா பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.காட்மன்டுவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரசண்டா’’ நேபாள பிரதமர் ஒளியின் தூண்டுதலின் பேரில் சிலர் , தேர்தல் ஆணையத்தில் ‘’ CPN – UML’’ என்ற பெயரில் புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளனர்’’ என்று திடுக்கிடும் புகாரைத் தெரிவித்தார்.
’’ஒளியின் செயல்பாடுகளால் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கட்சியைப் பிளவு படுத்த நான் விட மாட்டேன்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ஒளி தூண்டுதலில் அந்த நாட்டுத் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியின் பெயர் கடந்த ஒன்றாம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆளும் கட்சி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
-பா.பாரதி.