டில்லி
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் தொடங்கி விட்டதாக இந்திய மருத்துவ அமைப்பு (ஐ எம் ஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது,
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40243 பேர் பாதிக்கப்பட்டு 11,18,107 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 675 பேர் மரணம் அடைந்து மொத்த எண்ணிக்கை 27,503 ஆகி உள்ளது. தொடர்ந்து பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இது குறித்து இந்திய மருத்துவ அமைப்பின் தலைவர் மோங்கா செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர், “கொரோனா பரவுதல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. தினசரி பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கண்டறியப்படுகின்றனர். இதற்கு இந்தியாவில் கோரோனா வைரஸ் சமூகப் பரவல் தொடங்கி விட்டதாகும். இதனால் நாட்டின் நிலைமை மோசமாகி வருகிறது.
இவ்வாறு சமூகப் பரவல் ஆனதற்கு பல காரணங்கள் உள்ளன. தற்போது கொரோனா சிறு நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதே நிலை நீடித்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமானதாகி விடும். டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்த நம்மால் மகாராஷ்டிரம், கர்நாடகா, கோவா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் உட்பகுதியில் கட்டுப்படுத்த முடிந்ததா?
நாட்டில் பல நகரங்கள் தற்போது புதிய கொரோனா ஹாட் ஸ்பாட் ஆக மாறி வருகின்றன. இதனால் மாநில அரசுகள் முழு விழிப்புடன் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அவசியம் என்றால் மத்திய அரசிடம் இருந்தும் உதவிகலிஅ பிஎற வேண்டும். தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உள்ள இரு வழிகளாவது ஒன்று 70% மக்களை நோய்த் தொற்றுக்கு ஆளாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு வருவதும் மற்றொன்று தடுப்பூசி போடுவதும் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.