ஹரித்வார்: கொரோனா மாத்திரை தயாரிப்பதற்கான அனைத்து நெறிமுறைகளையும் பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார்.
கொரோனாவை குணமாக்கும் மருந்து என்று கொரோனில் என்ற பெயரில் சில நாட்கள் முன்பு பாபா ராம்தேவ் ஒரு மருந்தை அறிமுகப்படுத்தனார். ஆனால் அந்த மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்தது.
இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அனைத்து நெறிமுறைகளையும் பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக பாபா ராம்தேவ் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க கொரோனில் மாத்திரையை உருவாக்க தேவையான அனைத்து நெறிமுறைகளையும் தமது பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியது. நெறிமுறைகள் நவீன மருத்துவ அறிவியல்களால் அமைக்கப்பட்டவை. அஸ்வகந்தா, கிலோய், துளசி ஆகியவற்றைப் பயன்படுத்தி கொரோனிலை உருவாக்கி உள்ளோம்.
100 சதவீதம் மீட்பு உத்தரவாதம் உள்ளது. தனது குழு உருவாக்கிய கொரோனா கிட் கொண்டு கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும். பதஞ்சலி நடத்திய விசாரணையில் 3 நாட்களில் 69 சதவீதமும், 7 நாட்களில் 100 சதவீதமும் கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்.
இந்த சர்ச்சையானது தம்மையும் அவரது நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவையும் குறிவைத்து நடத்தப்பட்டது. கருத்து வேறுபாடு இருந்தால், எங்களை விமர்சிக்கலாம். சில நாட்களாக பதஞ்சலி நிறுவனம் குறித்து நிறைய தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த மருந்து நுரையீரலுக்குள் வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்தும். கொரோனில் உள்ளிட்ட மூன்று மருந்துகளும் இப்போது சந்தையில் கிடைக்கும். அவற்றில் எந்த உலோகமும் கலக்கப்படவில்லை என்றார்.