சென்னை: நாடு முழுவதும் பொது முடக்கம் நாளையுடன் முடிய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் 5ம் கட்ட ஊரடங்கு முடிகிறது. இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் போது மருத்துவக்குழுவினர் சில பரிந்துரைகளை முதலமைச்சரிடம் தெரிவித்து இருந்தது. இந் நிலையில் நாளையுடம் முடிய இருந்த ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும். ஜூலை 5 முதல் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
மதுரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மாவட்டங்களுக்குள் ஜூலை 15 வரை தனியார் மற்றும் அரசு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதைய நடைமுறையின் படி தரிசனம் கிடையாது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்விநிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி கிடையாது.மாநிலங்களுக்கு இடையேயோன பேருந்து போக்குவரத்து அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.