தூத்துக்குடி:
சாத்தான்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால், கைது செய்யப்பட்டு, துன்புறுத்தி கொல்லப்பட்ட தந்தை மகன் உயிரிழப்பு எதிரொலியாக சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேரை புதிதாக நியமித்து மாவட்ட எஸ்.பி உத்தர விட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கு நேரத்தை மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
காவல்துறையினரின் மிருகத்தனமான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர், காவலர்கள் உட்பட 27 பேர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 27 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற காவல்துறையினரின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட எஸ்.பி. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் ஒலிக்கத்தொடங்கி உள்ளன.