ஓமந்தூர் ராமசாமி பிறந்தநாள் (1895)
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி, விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக இவர் பதவி ஏற்றார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர். விவசாயிகள், மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
இவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இதன் மூலம், , தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தை இயற்றினார். கோயில்களில் வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்கவும் சட்டம் கொண்டுவந்தார்.
முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த மனிதர் இவர்.
கல்பனா சாவ்லா நினைவு நாள் (2003)
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் கல்பனா சாவ்லா ஆவார். பஞ்சாபில் பிறந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழ்ந்தார். பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது புவி வெளி மண்டலத்தில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.