ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுஉள்ளது.
இதன் காரணமாக, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகளும், கொரோனா தடுப்பு பணிக்கு ஏராளமாக செலவிடுவதால், நிதி செலவினங்களை கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியப்பயன்களில் கை வைக்க பல மாநில அரசுகள் முன்வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நிதிநிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ‘தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை, 2020’ என்ற பெயரில் சிறப்பு அவசர சட்டம் இயற்றப்பட்டுஉள்ளது. இதற்கு மாநில கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி உள்ளார்.
அதைத்தொடர்ந்து, இந்தச் சட்டம் சட்டம் மார்ச், 24 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசின் நிதி வருவாய் குறைந்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தரப்படும் ஊதியம் உள்ளிட்ட நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அதன் ஷரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.