சென்னை

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதா, வங்கிகள் காய்கறி மளிகைக் கடைகளில் கூட்டம் குவிகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  அகில  இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.க்  இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு உள்ளது.  மேலும் மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த 4 மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த முழு ஊரடங்கு சமயத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகள் 10 நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகள் மட்டும் வங்கிகள் குறைந்த ஊழியர்களுடன் இயங்க உள்ளது.

சென்னை நகரில் நேற்று காலை முதல் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கக் கடைகள் முன்பு மக்கள் திரண்டனர்.   காலை 6 மணிக்கு முன்னரே மளிகைக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் ஏராளமாகக் கூட்டம் கூடியதால் காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களுக்கு உதவினர்.

வங்கிகளின் முன்பாக நேற்று காலை 8 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்கவும் செலுத்தவும் நின்றிருந்தனர். வங்கிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என்பதால் மக்கள் வெகுநேரம் காத்திருக்க நேர்ந்தது.   ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டு ஒருவர் வெளி வந்த பிறகே மற்றவர் அனுமதிக்கப்பட்டார்.  இதனால் கூட்டம மேலும் அதிகரித்தது.

இதே நிலை இன்றும் தொடர வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் நேற்று இதே நிலை காணப்பட்டது.   நேற்று மாமல்லபுரத்தில் உள்ள வெளிநாட்டு மதுபானக் கடையில் சென்னையைச் சேர்ந்த பல மதுப்பிரியர்கள் வாகனத்தில் வந்து பெட்டி பெட்டியாக மதுபானங்கள் வாங்கிச் சென்றதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.