டெல்லி:
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் 600 முன்னணி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மருத்து கண்டுபிடிக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்கும் பணியில் சில இந்தியா நிறுவனங்களும் களமிறங்க உள்ளன. அவற்றில் பதஞ்சலியும் ஒன்று. இந்த நிறுவனம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டை உலுக்கி வரும கொடிய நோயான கொரோனா தொற்றுக்குச் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பதஞ்சலி தீவிரமாக இறங்கி இருப்பதாகவும், இந்திய மருத்துவ சோதனை ஒருங்கிணைப் பாளர் அலுவலகத்தில் பதிவு செய்து ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையின் மூலம் சோதனைகள் செய்து வருகின்றன என்று பதஞ்சலி ஆயுர்வேத ஆராய்ச்சி கழகத் தலைவர் பட்டாசாரியா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்து உள்ளது. தங்களது மருந்துளை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஐந்து நாட்கள் முதல் 14 நாட்கள் வரை சீராக உட்கொண்டால் அவர்கள் குணமடைவார்கள் என்றும், பல நோயாளிகள் இதனை உட்கொண்டு குணம் அடைந்து இருப்பதாகவும் அந்நிறுவன தலைவர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.
பதஞ்சலி நிறுவனம் கூறுவது உண்மையா, பொய்யா என்பது குறித்து இதுவரை இந்தியா சுகாதாரத்துறை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.