இந்தூர்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெய்யிலில் அமர வைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பெங்காலி பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடந்துள்ளது. இதில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை வகுப்பறையின் உள்ளே அமர்ந்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிய மத மாணவ மாணவிகளை வகுப்பறையின் வெளியே வெய்யிலில் தரையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.
இது குறித்து இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரைப் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கத்தின்படி அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பறையில் இடம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இஸ்லாமிய மாணவர்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிகப்பு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து டைனிக் ஜாகரன் என்னும் இந்தி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த செய்தியில் வேறு பள்ளியைச் சேர்ந்த இந்து மாணவர்களுக்கு வகுப்பறையில் இடம் அளித்துள்ள தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன் வகுப்பறையின் உள்ளே அமர வைக்கப்பட்ட இந்து மாணவர்களில் பலர் சிவப்பு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் விவரமும் அளிக்கப்பட்டுள்ளது.