ஞ்சை

மிழகத்தின் காவிரி படுகையிலும் அசாம் மாநில எண்ணெய் கிணறு தீ விபத்தை போல் விபத்து நடக்கலாம் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று அசாம் மாநிலத்தில் தின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜன் என்னும் ஊரில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எண்ணெய் கிணறு திடீரென தீப்பிடித்தது.  கடந்த இருவாரங்களாக அந்த தீயை அணைக்க முடியாமல் நிறுவனமும் மாநில அரசும் போராடி வருகின்றன.   அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்த தீ கட்டுக்குள் வர இன்னும் 4 வாரங்கள் ஆகலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் செய்தியாளரிடம், “தமிழகத்தில் காவிரி படுகையில் ஓ என் ஜி சி நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் கிணறுகள் குடியிருப்புக்களுக்கு மிக நெருக்கமான தூரத்தில் உள்ளன.   இவற்றை மூட வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசு காவிரி படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது.  எனவே தமிழக அரசு  இந்த எண்ணெய் கிணறுகளை மூட உத்தரவிட வேண்டும்.  இந்த எண்ணெய் கிணறுகளுக்கு அளித்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்து எண்ணெய் நிறுவனங்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.

தற்போது அசாம் மாநிலத்தில் நடக்கும் எண்ணெய் கிணறு தீ விபத்து போல இங்கும் நடக்கலாம்.   அத்தகைய தீ விபத்து எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நமது வாழ்விடத்தைக் காப்பது மிகவும் முக்கியமாகும்.  அதற்காகக் காவிரி படுகையிலுள்ள நிறுவனங்களை வெளியேற்றி எண்ணெய் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.