சமீபகாலங்களாக, தனது சட்டமன்ற உறுப்பினர்களை அடுத்தடுத்து இழந்து வருகிறது திமுக. இதனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் பெற்ற 3 இலக்க உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை, அக்கட்சியால் 1 ஆண்டுகூட அனுபவிக்க முடியாமல் போய்விட்ட அரசியல் சோகம் நிகழ்ந்துள்ளது!
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 89 சட்டமன்ற இடங்களில் வென்று, அதுவரை இல்லாத சாதனை எண்ணிக்கையாக, மிகப்பெரிய எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் உருவெடுத்தது திமுக.
அதற்கு முன்னதாக, மொழிவழி தமிழ்நாடு அமைந்த பிறகு, கடந்த 1984 சட்டமன்ற தேர்தலில் 61 உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சியும், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 61 உறுப்பினர்களை அதிமுகவும் பெற்றதே சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சிகளின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
அதேசமயம், கடந்த 1971ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் 184 இடங்களிலும், கடந்த 1996ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் 173 இடங்களிலும் வென்று, தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதிக உறுப்பினர்களைப் பெற்ற ஆளும் கட்சி என்ற வகையில், முதல் இரண்டு இடங்களுக்கான சாதனைகளையும் திமுகவே வைத்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராஜீவ்காந்தி படுகொலை அனுதாப அலையால், 164 இடங்களைப் பெற்ற அதிமுக மூன்றாமிட சாதனையை தக்கவைத்துள்ளது.
ஆட்சியமைக்கும் அளவிற்கு திமுக பெரும்பான்மையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், வாய்ப்பைக் கோட்டைவிட்டாலும், 89 இடங்களில் வென்று, அதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரும் எண்ணிக்கையில், பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது திமுக.
இந்நிலையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கலைஞர் கருணாநிதி, கடந்த 2018ம் ஆண்டு மறைந்ததையடுத்து, திமுக உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆனது.
பின்னர், தமிழகத்தின் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு, 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திருவாரூர் தொகுதியுடன் சேர்த்து, மேலும் கூடுதலாக 12 இடங்களை வென்று, தனது சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 101 என்பதாக அதிகரித்துக் கொண்டது திமுக. அதாவது, கடந்த 1996 தேர்தலுக்குப் பிறகு, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 3 இலக்கத்திற்கு அப்போதுதான் உயர்ந்தது!
தமிழக சட்டமன்ற வரலாற்றில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் 3 இலக்க உறுப்பினர்களின் பலத்தோடு சட்டமன்றத்தில் இடம்பெற்ற மாபெரும் அதிசயம் அப்போது நிகழ்ந்தது!
(இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், தமிழக சட்டமன்ற வரலாற்றில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் 2 இலக்க உறுப்பினர்களின் பலத்துடன் எதிரெதிராக அமர்ந்தது 2006ம் ஆண்டு நிகழ்ந்தது!)
2019 தேர்தல் முடிவடைந்த அடுத்த ஒரே மாதத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக உறுப்பினராக இருந்த ராதாமணி, உடல்நலக் குறைவால், அந்தாண்டு ஜுன் 14ம் தேதி காலமானார். திமுகவின் எண்ணிக்கை 100 என்றானது. ஆனாலும், முதலுக்கு மோசமில்லை என்ற நிலை!
அடுத்த 8 மாதங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லைதான். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி 27ம் தேதி, வடசென்னையின் மீனவர் பகுதிகளில் இருந்த அதிமுகவின் செல்வாக்கை மீறி, திமுகவின் கொடியை அப்பகுதிகளில் பறக்கவிட்டு, திருவள்ளூர் மாவட்ட திமுகவின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கிய, திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி காலமானார். திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 99 என்று இரட்டை இலக்கத்திற்கு மீண்டும் இறங்கியது.
ஆனால், இடையில் ஒருநாள் கூட இடைவெளி இல்லை. அடுத்த நாளே, அதாவது பிப்ரவரி 28ம் தேதியே, குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற திமுக உறுப்பினர் காத்தவராயன் காலமானார். இதனால் திமுகவின் எண்ணிக்கை மேலும் இறங்கி 98 என்றானது.
சோதனை, இதோடு அந்தக் கட்சிக்கு முடிந்துவிடவில்லை. கலைஞர் கருணாநிதியின் அபிமானத்தைப் பெற்றிருந்த பழக்கடை ஜெயராமனின் மகனும், சென்னை மாநகரின் பிரபலமான திமுக பிரமுகராகவும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் வலம்வந்த ஜெ.அன்பழகன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார். இதனால், திமுகவின் எண்ணிக்கை இப்போது 97ஆக இறங்கிவிட்டது.
(விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், தொகுதியை, ஆளுங்கட்சியான அதிமுகவிடம் பறிகொடுத்துவிட்டது திமுக என்பது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.)
நீண்டகால இடைவெளிக்குப் பிறகு, சட்டமன்றத்தில் 3 இலக்கத்தில் இடம்பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சி, அக்கட்சித் தலைமைக்கு ஓராண்டுகூட நீடிக்கவில்லை. அந்தக் கட்சி கூட்டணிகளின் உதவியுடன் ஐந்தாண்டுகள் ஆட்சிபுரிந்த 2006-2011 காலக்கட்டத்தில்கூட, திமுகவிற்கு 96 உறுப்பினர்களின் பலம்தான் இருந்தது!
தனிமாநிலமாகப் பிரிக்கப்பட்ட தமிழகத்தில், ஒரு கட்சி, போதுமான உறுப்பினர்களின் பலம் இல்லாமல், அதேசமயம், பிற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க, தனிக்கட்சி அரசை முழுமையான காலமும் எந்தச் சிக்கலுமின்றி நடத்தியது அப்போதுதான்! அந்த சாதனையும் திமுகவிற்கே..!
தற்போது, கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், குடியாத்தம், திருவொற்றியூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்கள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படியே ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்றாலும், அதில், ஆளுங்கட்சியின் பல்வேறு தகிடுதத்தங்களை மீறி திமுக மூன்று தொகுதிகளிலுமே வென்றால்தான், அக்கட்சிக்கு மீண்டும் 3 இலக்க அந்தஸ்து கிடைக்கும்.
இல்லையெனில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், திறமையான முறையில் தேர்தல் வியூகம் வகுத்து (கடந்த சில தேர்தல்களில் சொதப்பியதைப் போலின்றி), தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்வதே, அக்கட்சியின் நீண்ட அரசியல் பயணத்தில், நெடுங்காலத்திற்குப் பிறகு, கிடைக்கக்கூடிய ஒரு பெரிய புத்துணர்ச்சியாக அமையும்..!
– மதுரை மாயாண்டி