இந்தூர்: அரசின் விதிமுறைகளுக்கு இணங்கியே விற்பனை செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டதால், மத்தியப் பிரதேச மாநிலத்தில், தங்கள் விற்பனை உரிமங்களை அரசிடம் திரும்ப அளிக்கத் துவங்கியுள்ளனர் மதுபான விற்பனை ஒப்பந்ததாரர்கள்.
இந்நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கி, மதுக்கடைகளை மீண்டும் திறப்பதில் ஆர்வமாக உள்ள மத்தியப் பிரதேச மாநில அரசு, மது விற்பனையை தானே எடுத்து நடத்துவது அல்லது தனியாரிடம் ஒப்படைப்பது என்பதில் ஒன்றை தேர்வுசெய்யும் நிலையில் உள்ளது.
மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றம், மதுபான ஒப்பந்ததாரர்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களது மதுபான வணிகத்தைத் தொடர வேண்டும் அல்லது தங்களுடைய விற்பனை உரிம ஒப்பந்தங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டது.
கொரோனா பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மதுபான வணிகத்தில் ஏற்பட்ட பெரும் சரிவை ஈடுகட்டும் விதமாக, மதுபான விற்பனை தொடர்பான விதிமுறைகளை அரசு மாற்றியமைக்க உத்தரவிட வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மாநில அரசு தரப்பிலோ, கட்டுப்பாடுகளைப் பின்பற்றித்தான் வணிகம் நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மது விற்பனை காலஅளவானது, 12 மணிநேரத்திலிருந்து 6 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
மேலும், மதுக்கடைகளுடன் இணைந்த பார்களை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டது. இதனால், தனியார் மது விற்பனையாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்தார்கள். மேலும், நீதிமன்ற உத்தரவும் அவர்களுக்கு எதிராக அமையவே, அவர்களில் பலர் தங்களின் உரிமங்களை அரசிடம் ஒப்படைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், மதுபான விற்பனை தொடர்பாக புதிய ஏல நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.