டெல்லி: எல்லையில் என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும், மனதை மகிழ்ச்சியாக வைப்பற்கு எப்படி வேண்டுமானாலும் கூறலாம் என்று மறைமுகமாக அமித் ஷாவை சாடியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பிறகு அதன் எல்லைகளை பாதுகாக்கும் ஒரே நாடு இந்தியா தான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய ஒரு நாள் கழித்து, ராகுல் காந்தி இந்த கருத்தை முன் வைத்து உள்ளார்.
இந்த கருத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். அந்த பதிவில், எல்லைகளின் யதார்த்தம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவேளை ஒருவரின் (அமித்ஷா) இதயத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க இப்படி ஏதாவது நகைச்சுவையாக சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வீடியோ கான்பிரன்ஸ் முறையில் பீகாரில் பேரணியில் அமித் ஷா பேசினார். அப்போது, இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் தனது எல்லைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது என்றார்.
கடந்த 3ம் தேதி லடாக்கில் சீனாவுடன் ராணுவ மோதல் தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அந்த டுவிட்டரில், சீன வீரர்கள் யாரும் இந்தியாவுக்குள் நுழையவில்லை என்பதை இந்திய அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியுமா? என்று கூறி இருந்தார்.