டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். போக்குவரத்து வசதி இன்றி ஆயிரக்கணக்கானோர் நடந்தும், சைக்கிளிலும், லாரிகளிலும் பயணிக்கின்றனர்.
அப்போது பலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறின. இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
அதே நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஜூன் 3 வரை 4,228 சிறப்பு ஷராமிக் ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் 57 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சொந்த ஊர் திரும்பி இருக்கின்றனர். இதன் மூலம் 1 கோடி பேர் சொந்த ஊருக்கு திரும்பியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.