திண்டுக்கல்
பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த மாணவியால் கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலில் கொரோனா ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சென்னை ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த மாணவி ஒருவர் 10 ஆம் வகுப்பில் படித்து வருகிறார். கொரோனா தொற்று அச்சம் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதையொட்டி இந்த மாணவி சென்னைக்கு வந்துள்ளார்,
தற்போது 10 ஆம் வகுப்புத் தேர்வு தொடங்க உள்ளதால் இவர் சென்னையில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் வந்தார். இவரைத் திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூரில் கொரோனா பரிசோதனை செய்தனர். இவர் அதன் பிறகு கொடைக்கானல் சென்றார்.
இன்று காலை வெளியான பரிசோதனை முடிவுகளில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால் மாணவியைத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொரோனா வார்டில் அனுமதித்துள்ளனர். இவருக்கு அய்யலூரில் நடந்த பரிசோதனைக்குப் பிறகு இவர் கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் ஓர் இரவு தங்கி இருந்தார்.
இதையொட்டி அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் காரில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் பெற்றோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக இருந்தது. தற்போது இந்த மாணவி தங்கியதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.