புதுடெல்லி:
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நாளை நிசார்கா புயல் தாக்க உள்ள நிலையில், மீட்பு பணிக்காக 21 பேரிடர் மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான உம்பன் புயல், மேற்கு வங்கத்தை தாக்கி பெரும்சேதம் ஏற்படுத்தியது. இந்நிலையில் அரபிக்கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து ஜூன் 3-ம் தேதி காலையில் மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரைப்பகுதிகளை சென்றடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் மீட்பு பணிக்காக 21 பேரிடர் மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிசார்கா புயலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருவதாகவும், மீட்பு பணிகளுக்காக 21 குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுமட்டுமின்றி மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மீட்பு நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் இணைத்து பணியாற்றி வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்தார். நிசார்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நாளை தாக்க உள்ளது என்பது கூறப்படுகிறது.