கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சிரம் என்ற இடத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் சந்திராவுக்கு திடீர் என தேர்வு அறிவிக்கப்பட்டது.
அவர் வசிப்பது, ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் சூழ்ந்த இடமான குட்டநாடு பகுதி.
சந்திரா வீட்டில் இருந்து பள்ளிக்கு படகில் தான் செல்ல முடியும்.
ஊரடங்கு காரணமாக படகு போக்குவரத்தை மாநில அரசு நிறுத்தி வைத்திருந்தது.
சந்திரா துடித்துப்போனார்.
’’இந்த வருட படிப்பு அவ்வளவுதான்’’ என்று சந்திராவின் பெற்றோரும் கவலையில் ஆழ்ந்தனர்.
கேரள படகு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு சந்திரா போன் செய்து, தனது நிலையை விளக்கி உள்ளார்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் நல்ல விஷயம் தான்.
சந்திரா இரண்டு நாட்கள் தேர்வு எழுத தனி படகு ஒன்றை அரசாங்கமே ஏற்பாடு செய்தது.
70 பேர் அமர்ந்து பயணிக்கும் படகில் சந்திரா மட்டும் , அமர வைக்கப்பட்டு, அவர் வீட்டில் இருந்து அக்கறையில் உள்ள பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தேர்வு முடியும் நேரம் வரை அந்த படகு காத்திருந்து சந்திராவை மீண்டும் அழைத்துக்கொண்டு, அவர் வீட்டில் விட்டு சென்றுள்ளது.
’’நடந்தது கனவா?அல்லது நனவா?’’ என்று சந்திராவுக்கு இன்னும் புரிபடவில்லை.