சென்னை
தமிழக அரசு நாளை முதல் மாநிலத்தினுள் பயணம் செய்வோருக்கு அறிவித்துள்ள விதிமுறைகளின் விளக்கம் இதோ
தமிழக அரசு நாளை முதல் மாநிலத்தில் பொதுப் போக்குவரத்துக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
அது குறித்த விவரங்கள் இதோ
நாளை அதாவது ஜூன் 1முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த 8 மண்டலங்களாக மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.
- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், மற்றும் நாமக்கல்
- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி,
- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி
- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம்
- தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி, மற்றும் தென்காசி
- காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு
- சென்னை காவல் எல்லையில் வரும் பகுதிகள்
இவற்றில் 7 மற்றும் 8 ஆம் மண்டலத்தில் அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டது.
மற்ற மண்டலங்களில் 50% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் மூலம் மண்டலத்துக்குள் மட்டும் செல்ல முடியும்.
மண்டலங்களுக்குள் தனியார் பேருந்துகளும் இயங்கலாம்.
இவ்வாறு இயங்கும் பேருந்துகளில் மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்லலாம்.
இந்த மண்டலங்களுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவை இல்லை.
ஆனால் மண்டலத்தை விட்டு வேறு மண்டலங்களுக்குச் செல்வோருக்கு இ பாஸ் அவசியம் தேவை ஆகும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் டாக்சிகள், கேப்கள், ஆட்டோக்கள் சைக்கிள் ரிக்ஷாக்கள் இயங்க அனுமதி உண்டு.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இருவரும் டாக்சி மற்றும் கேப்களில் ஓட்டுநர் தவிர மூவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உண்டு
ஆயினும் மாநிலம் முழுவதும் நோய் அதிகம் உள்ளதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.