மும்பை: சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு முடக்கத்தால், வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், அவற்றை நம்பியுள்ள பெரு நிறுவனங்களுக்கு மற்றொரு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
தற்போதைய தொடர் ஊரடங்கால், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல திவால் நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளன.
இத்தகைய நிறுவனங்களிடமிருந்து பல பெரிய நிறுவனங்கள் கச்சாப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை வாங்குகின்றன.
இந்நிலையில், பொருளாதார இக்கட்டின் காரணமாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல, ஜிஎஸ்டி -யை சரியாக செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், அவற்றிடமிருந்து கச்சாப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை வாங்கும் பெரு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி கிரெடிட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 16-இல் உள்ள விதிமுறை இவ்வாறு தெரிவிக்கிறது. எனவே, தங்களுடன் வணிக தொடர்பு கொண்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், முறையாக ஜிஎஸ்டி செலுத்துகின்றனவா? என்று சரிபார்க்க வேண்டிய நெருக்கடி அந்த பெரு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.