தாலி கட்டிய கையோடு தனிமைப்படுத்தப்பட்ட மணமக்கள்..
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜனுக்கும், கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த விமலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
காசர்கோட்டில் மணமகன் ஊரில் உள்ள கோயிலில் காலை 11 மணிக்கு முகூர்த்தம். .
மங்களூருவில் இருந்து மணமகள் விமலா, தனது தாயாருடன் திருமணத்தன்று காலையில் காரில் புறப்பட்டு வந்துள்ளார்.
கேரளாவில் நுழைய மருத்துவ காரணம் சொல்லி அவர்கள் பாஸ் பெற்றிருந்தனர்.
கேரள எல்லையான தலப்பாடி சோதனை சாவடியில் அவர்கள் காரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். மருத்துவ காரணம் எனப் பாசில் குறிப்பிட்டு விட்டு , ’’திருமணத்துக்குச் செல்கிறோம் என ஊழியர்களிடம் சொன்னதால் ’’இந்த பாஸ் செல்லாது’’ என்று கூறி அவர்கள் காரை அனுமதிக்கவில்லை.
பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் உண்மை காரணம் சொல்லிப் போராடி, மீண்டும் ’’பாஸ்’’பெற்ற போது மணி மாலை -4 .
முகூர்த்தம் முடிந்திருந்தது.
சோதனை சாவடியைக் கடந்து மணமகன் ஊர் வந்த சேர்ந்த போது சூரியன் மறைந்து இரவு நேரம் ஆரம்பமாகி இருந்தது..
என்ன செய்வது?
வேறு வழி இல்லாமல் மாலை 6.30 மணிக்குத் தனது வீட்டில் விமலாவுக்கு தாலி கட்டியுள்ளார், புஷ்பராஜன்.
அவருக்கு நிஜமான சோதனை அப்புறம் தான் ஆரம்பமானது.
அடுத்த மாநிலத்தில் இருந்து வந்துள்ளதால், மணமகள் விமலாவையும், அவர் தாயாரையும் 14 நாட்கள், புஷ்பராஜன் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அலுவலர்கள் அறிவுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
கொரோனாவை சபித்தபடி , பக்கத்து ரூமில் முனகிக்கொண்டிருக்கிறார் ,புது மாப்பிள்ளை புஷ்பராஜன்.
– ஏழுமலை வெங்கடேசன்