வாஷிங்கடன்: அமெரிக்க தேர்தல் களத்தில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார் முன்னாள் அதிபர் ஒபாமா.
அமெரிக்க அதிபர் தேர்தல், சட்டப்படி, இந்தாண்டின் பிற்பகுதியில் நடத்தப்ட வேண்டும். ஆனால், கொரோனா பரவல் அந்நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில், என்ன நடக்கும்? என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்துள்ளது.
இந்நிலையில், குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஒபமாவிற்கு துணை அதிபராக இருந்த ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் இரு கட்சிகளுக்கும் இடையே முன்னரே துவங்கிவிட்டது.
இந்நிலையில், கருப்பின மக்களின் ஓட்டுக்களை கவர்வதற்கும், இளைய வயதுடைய ஜனநாயகக் கட்சியினரைக் கவர்வதற்கும் ஒபாமாவின் பிரச்சாரம் பெரியளவில் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, ஒபாமா இன்னும் செல்வாக்கான நபராக திகழ்ந்து வருகிறார். எனவே, அவரின் கட்சி வேட்பாளரும், அவருக்குத் துணையாக இருந்தவருமான ஜோ பைடன் வெல்ல வேண்டுமெனில், ஒபாமா தீவிரமாக களமிறங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஜனநாயகக் கட்சி வட்டாரங்கள் எழுந்துள்ளது.