கோவை
கோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.
நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. பலரும் தெருக்களில் நடப்பது கூட கிடையாது. இதனால் ஆதரவற்ற தெரு நாய்கள் உணவு இன்றி பட்டினியால் துயரடைந்து வருகின்றன. முன்பு உணவு விடுதிகளில் மிஞ்சும் உணவுகள் மற்றும் தெருக்களில் செல்வோர் ஆகியோர் உணவு வழங்கி வந்த நிலையில் தற்போது அது அடியோடு ந்ன்று போனது. இந்த நிலை கோவையைச் சேர்ந்த 25 வயது பெண்ணான மேகா ஜோஸ் என்பவரின் மனதை உருக்கியது.
சிஸ்கோவில் பணி புரிந்து வந்த மேகா பணியில் இருந்து விலகி கோவையில் தனது குடும்ப தொழிற்சாலையைக் கவனிக்கக் கோவைக்கு வந்தார். அவர் இங்கு பாசம் பூப்பிள் பிரஜாக்ட் என்னும் விலங்கு ஆர்வல அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு தெரு நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்து அவற்றை உதவி நாய்களாக மாறும் பணியை செய்து வருகிறது. கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பால் தெரு நாய்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மேகா, “முதலில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது குறித்து நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் மார்ச் மாத இறுதியில் கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது பல தெரு நாய்கள் பட்டினியால் துயருற்றன. ஒரு பூனை உணவின்றி மரணம் அடைந்தது. இதனால் எங்கள் அமைப்பின் மூலம் தெரு நாய்களுக்கு உணவளிக்கத் தீர்மானித்தேன்.
இதற்கு எனக்கு 50 தன்னார்வ தொண்டர்கள் உதவுகின்றனர். இவர்கள் உதவியுடன் நாங்கள் தினமும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளிக்கிறோம் எனக்கு உதவுவோர் பெரும்பாலும் அலுவலக ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். தற்போது அவர்கள் வீட்டிலேயே இருப்பதால் உதவ முன் வந்துள்ளனர். எங்கள் அமைப்பு மூலம் நாங்கள் இதற்கு நிதி திரட்டினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் எங்களால் இந்த சேவையைச் செய்ய முடிகிறது.
சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதன்படி 100க்கும் மேற்பட்டோர் அளிக்கும் சிறு சிறு உதவியால் நாங்கள் 1500 நாய்களின் பசியைப் போக்கி உள்ளோம். நாங்கள் உலர் உணவுகளைக் கடைகளில் இருந்து வாங்குகிறோம். சமைத்த உணவுகளை ஒரு சிலர் அவர்களாகவே தந்து உதவுகின்றனர். அவற்றை நாய்களுக்கு அளிப்பதால் நாய்கள் எங்களுடன் நட்புடன் பழகத் தொடங்கி உள்ளன. எனவே இனி நாய்களுக்கு எளிதாக கருத்தடை செய்ய அழைத்துச் செல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.