புதுடெல்லி: இந்திய நாட்டில் இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரல் மாத்தில் 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; கொரோனா பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் 25ல் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் சுமார் 12.20 கோடி பேர் தங்களின் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களில், கடைகள், உணவகங்களில் பணியாற்றுவோர், சிறு வணிகர்கள், கூலி வேலை செய்வோரின் எண்ணிக்கை, பெருமளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மே 3 வரையிலான வாரத்தில், நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் இதற்குமுன் இல்லாத வகையில் 27.1% ஆக உயர்ந்துள்ளது. இது 2017 ஜூலை – 2018 ஜூன் காலகட்டத்தில் 6.1% என்பதாக இருந்தது. இந்த நிலையானது 45 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
வேலையில் உள்ளோர் மற்றும் வேலையில்லாதோரை உள்ளடக்கிய தொழிலாளர் பங்களிப்பு விகிதம், ஏப்ரல் 21 நிலவரப்படி, 35.4% என்பதாக இருந்தது. ஆனால், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்ததால் இது, மே 3ம் தேதி நிலவரப்படி 36.2% என்பதாக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச்சில், வேலைவாய்ப்பு 39.60 கோடியாக குறைந்துள்ளது. இந்நிலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். இந்நிலையில், ஏப்ரல் மாத காலகட்டத்தில், வேலைவாய்ப்பு மேலும் 11.40 கோடி குறைந்து, 28.20 கோடியாக சரிவடைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.