பெங்களூரு

கொரோனா அதிகம் உள்ள மாநில பயணிகள் அவசியம் தனிமையில் இருக்க வேண்டும் என்னும்  கர்நாடக அரசின் உததரவால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரும் 17 ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.   அதையொட்டி மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது மத்திய அரசு கொரோனா தாக்குதலின் அள்வைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

இதையொட்டி நேற்று திடீரென கர்நாடக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.  அதன்படி கொரோனா அதிகம் உள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ளோர் கர்நாடகாவுக்கு வந்தால் அவசியம் அரசின் தனிமை விடுதியில் 14 நாட்கள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.    இது இம்மாநிலங்களிலிருந்து கர்நாடகா வரும் பயணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த உத்தரவால் கர்நாடகா – மகாராஷ்டிரா,  தமிழ்நாடு – கர்நாடகா போன்ற எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் ஏராளமாக அணிவகுத்து நிற்கின்றன.   பல பயணிகள் அரசு ஊரடங்கு விதிகளில் தங்க விரும்பாததே இதற்குக் காரணமாக்கும்.  ஒரு சிலர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு திரும்பி சென்று விடுகின்றனர்.

வேறு சிலர் தங்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.  அதிகாரிகள் அறிகுறிகள் இல்லாத ஒரு சில பயணிகளுக்கு மட்டும் வீட்டுத் தனிமைக்கு அனுமதி அளிக்கின்றனர்.  ஆனால் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் டில்லியில் இருந்து வருவோருக்கு அறிகுறிகள் இல்லை எனினும் அரசு தனிமை விடுதிகளுக்குச் செல்ல வேண்டும் என உத்தரவிடுகின்றனர்.

சமீபத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில்  நடந்த  மூத்த அமைச்சர்கள் கூடத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.    இந்த முடிவு  எடுக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாடு எல்லையில் உள்ள அத்திபெலே சுங்கச்சாவடி மூடப்பட்டுள்ளது.   அந்த பகுதியில் வரும் அனைத்து பயணிகளும் திருப்பு அனுப்பப்படுகின்றனர்.  அதையும் மீறி கர்நாடகா வர விரும்புவோர் அரசு தனிமை விடுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.