சாப்பிடும் பேக்கரியில் மதபேதம்.. வதந்தியால் வந்த புது வம்பு….
நாட்டில் அனைவரும் மதநல்லிணக்கத்தை போற்றி வரும் சூழலில் சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ஒரு பேக்கரி, “எங்களிடம் முஸ்லீம் பணியாளர்கள் யாரும் இல்லை” என்று குறுஞ்செய்தி மூலம் விளம்பரப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாகராய நகரிலுள்ள ஜெயின் பேக்கரி மற்றும் கன்பெக்சனரிஸ் என்னும் ஒரு பேக்கரியிலிருந்து அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு, “இங்கு தயாராகும் பொருட்கள் அனைத்துமே ஜெயின் பணியாளர்களால் தயாரிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் யாரும் எங்களிடம் பணியில் இல்லை” என்கிற குறுஞ்செய்தி வாட்ஸ்ஆப் மூலம் பரப்பப்பட்டுள்ளது.
இதுபற்றி பேக்கரியின் உரிமையாளர் ராகேஷ் என்பவரிடம் கேட்ட போது, “இது எங்களுக்கு ஏற்கெனவே வந்த ஒரு விசாரணை செய்திக்கான பதில் மட்டுமே. சௌகார்பேட்டை பகுதியிலிருந்து வந்த ஒரு வாட்ஸ்ஆப் மெசேஜில் ‘இந்த பகுதியில் இருக்கும் பேக்கரிகளில் இஸ்லாமியர்கள் பணியிலிருப்பதால், எந்த உணவுப் பொருளையும் வாங்க வேண்டாம்’ என்று பரப்பப்பட்டதற்கான பதிலாகத் தான் நாங்கள் அனுப்பியிருந்தோம்” என்று பதில் அளிக்கிறார்.
“இதனைத் தொடர்ந்து எங்களுக்கு எங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து போன் மூலம் விசாரணை வந்த வண்ணம் இருந்ததால் எங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியே இந்த குறுஞ்செய்தியினை அனுப்பினோம். மற்றபடி எந்த ஒரு மதத்தினரையும் இழிவு படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்களும் எங்களின் வாடிக்கையாளர்கள் தான்” என்று விவரிக்கிறார்.
எனினும் மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன், “இது குறிப்பிட்ட மதத்தினரை இழிவு படுத்தும் ஓர் செயல். இந்த செய்தி இஸ்லாமியர்களை அவமதிப்பதாகவும், மத ரீதியாகத் தனிமைப்படுத்துவதாகவும் உள்ளது. இது சம்பந்தமான இவர்களது விளக்கம் ஏற்புடையதாக இல்லை. இந்த செய்தியினை பரப்பியவர் மேல் இந்தியத் தண்டனை சட்டப்பிரிவுகள் 153 (கலவரத்தைத் தூண்டுதல்), 153A, 505 (பிற மதத்தினருக்கு எதிரான குற்றம் புரிதல்) மற்றும் 295A (குறிப்பிட்ட பிரிவினரை அவமதித்தல்) போன்றவற்றின் கீழ் வழக்குத்தொடர முகாந்திரம் உள்ளது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
வியாபாரத்திற்காக இது போல ஒரு குறிப்பிட்ட மதத்தினரை இழிவு படுத்துவது எந்த சூழலிலுமே ஏற்புடையதல்ல. இது தேவையற்ற மத பிரச்சினைகளை உருவாக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
– லெட்சுமி பிரியா