
தமிழகத்தில் சென்னை தவிர, மே 7ம் தேதி முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அண்டை மாநிலங்கள் சிலவற்றில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், இங்குள்ளவர்கள் எல்லை தாண்டிச் செல்வதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற பிரமாதமான(!) காரணம் அதற்கு சொல்லப்பட்டது.
சரி, இந்தக் காரணம் ஒருபக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். விபரம் அறிந்தவர்களுக்கு நன்றாகவேப் புரியும்; டாஸ்மாக் வருமானம் இல்லாமல் தமிழக அரசு தள்ளாடுகிறது என்று! எனவே, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் இந்த ஆபத்தான முடிவை எடுத்திருக்கிறார்கள்.
டாஸ்மாக் திறப்பு என்ற நடவடிக்கை, கொரோனா வைரஸ் சென்று சேராத பல்வேறு கிராமப்புற பகுதிகளிலும், அந்த வைரஸை வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்துவிடும் என்று கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள சூழலில், இந்த திறப்பின் மூலம் அரசு எதிர்பார்த்த வருவாய், இந்த சூழலில் உண்மையிலேயே கிடைக்குமா? என்ற லாஜிக்கான கேள்விகளும் எழவே செய்கின்றன.
டாஸ்மாக் என்பது பொருளாதார நிலையில், பெரும்பாலும் கீழ்வர்க்கம், கீழ் மத்தியதர வர்க்கம் மற்றும் மேல் மத்தியதர வர்க்கம் என்ற நிலைகளைச் சேர்ந்த அனைவருக்குமானது என்ற போதிலும், டாஸ்மாக் என்பது அன்றாடம் காய்ச்சிகளுடன் அதிகம் அடையாளப்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது.

இதனால்தான், எங்களின் தாலியை அறுக்க வேண்டாமென, மாநிலத்தின் பல பகுதிகளிலும், முந்தைய ஆண்டுகளில், பெண்கள் ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
டாஸ்மாக்கை திறந்தால் தற்போது தடைபட்டுப் போயிருக்கும் வருவாய், அரசுக்கு கிடைக்கும் என்பதுதான் காரணம் என்று சொல்லாமலேயே தெரியும்போது, அந்த வருமானம் எப்படி வரும்? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
கடந்த மார்ச் 22 முதல் இப்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால், பரவலான பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மாத ஊதியத்தில் பணிசெய்வோர் பலர், கடுமையான ஊதிய இழப்பை சந்தித்துள்ளதோடு, பலர், தங்களுடைய வேலைகளையும் இழந்துள்ளனர். பலருக்கு பாதி சம்பளமே வழங்கப்படுகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் கதை கந்தலாகியுள்ளது. மற்றபடி, தினமும் வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் சோறு என்ற நிலையில் இருக்கும் மிகக் கணிசமான ஜனத்தொகையினர், 3 வேளையும் சாப்பிடுகிறார்களா? என்பதே தெரியவில்லை. அரசுகள் கொடுக்கும் நிவாரணம் என்பது வெறும் அடையாளம் என்ற அளவிலேயே இருக்கிறது.

விவசாயம் சார்ந்த பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. அதில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் ஊதியமும் குறைவுதான். உணவுத் தேவையை நிறைவு செய்யவே பற்றாக்குறை என்ற நிலை!
இந்த அன்றாடக் கூலி ஆட்களில் பலர்தான், வருமானத்தில் முக்கால்வாசி அல்லது முழுவதையுமே டாஸ்மாக்கில் காலிசெய்துவிட்டு, குடும்பத்தைக் கதற விடுபவர்கள்!
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கால், இவர்கள் சுத்தமாக காய்ந்து போயுள்ளனர். உணவுப் பொருள் சார்ந்த அத்தியாவசிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கொஞ்சம் பணம் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள் & அவர்கள் எண்ணிக்கையிலும் குறைவுதான்.
ஆக, கீழ்த்தட்டு பொருளாதார நிலையில் இருக்கும் குடிமகன்களையே அதிகம் சார்ந்திருக்கும் டாஸ்மாக், அவர்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வருமானமின்றி, பெரும்பாலானோர் சரியான உணவுக்கே வழியின்றி திணறிக் கொண்டிருக்கையில், டாஸ்மாக்கிற்கு தருவதற்கு அவர்களிடம் எப்படிப் பணம் இருக்கும்?
எப்படி எப்படியோ சமாளித்து, ஒருமுறை அல்லது இருமுறை வாங்கலாம். ஆனால், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், அவர்களால் எப்படி தினந்தோறும் டாஸ்மாக் செல்ல முடியும்?
கடை திறந்திருக்குது..! ஆனால், கையில் காசு இல்லையே..! என்ற ஏக்கம் அவர்களை எதை நோக்கி இட்டுச் செல்லும்? வீட்டில் இருப்பதை அடகு வைக்கலாம் என்றாலும்கூட, அதற்கான கடை திறக்கவில்லை. அவர்களைப் போன்றவர்களிடம் அடகு வைக்கவும் பெரிதாக எதுவும் இருந்துவிடப் போவதில்லைதான்!

ஒருசில பொருட்களை அடகு வைத்து, ஒருசில முறை குடிப்பதும் அடைப்பட்டு போய்விட்ட நிலையில், வேலைக்குச் சென்று சம்பாதித்துக் குடிப்பதற்கும் வழியில்லாத சூழலில், அவர்களின் எண்ணம் திருட்டு, வழிப்பறி போன்ற தவறான விஷயங்களின்பால் திசை திரும்பினால், சமூகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை என்னவாகும் என்ற கவலை பல சாமான்யர்களுக்குக்கூட இருக்கிறது!
ஆனால், முக்கியமாக இருக்க வேண்டிய அரசுக்குத்தான் இல்லையோ..!
– மதுரை மாயாண்டி